வாட்ஸ் ஆப்பில் மற்றவர்களுக்கு தவறான செய்திகளை அனுப்பிவிட்டீர்களா? அல்லது, வேறு யாருக்கேனும் அனுப்ப வேண்டிய செய்திகளை மற்றவர்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டீர்களா? இனிமேல் கவலை வேண்டாம். அந்த செய்திகளை உங்கள் செல்ஃபோனில் மட்டுமல்லாமல், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவர்களது செல்ஃபோனிலிருந்தும் அழிக்கும் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதியை, வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் நாம் பெற முடியும். முன்பெல்லாம், யாருக்காவது தவறான செய்திகளை அனுப்பிவிட்டால், தர்மசங்கடத்தை எதிர்கொள்ள நேரிடும். இனிமேல் அந்த பயமே வேண்டாம்.
உதாரணமாக, நீங்கள் யாருக்காவது தவறான செய்திகளை அனுப்பிவிட்டீர்கள் என நினைத்துக்கொள்வோம். உடனேயே நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்த செய்தியை ‘லாங் ப்ரெஸ்’ செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, உங்களுக்கு இரு ஆப்ஷன்கள் தோன்றும். ’delete for everyone' மற்றும் ‘delete for me'. இதில், ‘delete for everyone' ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், அந்த மெசேஜ் யாருக்கு அனுப்பப்பட்டதோ, அவர்களுடைய செல்ஃபோனிலிருந்து அழிந்துவிடும்.
உடனடியாக உங்களுக்கு, ‘you deleted this message' என்றும், செய்தியை பெற்றவர்களுக்கு ‘this message was deleted’ எனவும் அலர்ட் வரும். ஒருவேளை, உங்களுக்கு அலர்ட் ஏதும் வராத பட்சத்தில் அந்த மெசேஜை பெற்றவர்கள் பார்த்துவிட வாய்ப்புண்டு. தனிநபர் மெசேஜ் மட்டுமல்லாமல், குரூப் மெசேஜ், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் இந்த முறையில் அழிக்க முடியும்.
ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். நீங்கள் மெசேஜ் அனுப்பிய 7 நிமிடங்களுக்கு மட்டும்தான் இந்த ஆப்ஷனை பயன்படுத்த முடியும். அதற்குமேல், மெசேஜை அழிக்க முடியாது.