வாட்ஸ்அப்பின் இந்தியா பிரிவு தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்பார்ம்ஸ் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் வாட்ஸ்அப் பொதுக் கொள்கைகான இயக்குநராக உள்ள ஷிவ்நாத் துக்ரால், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்டா ஆப்களுக்கான பொதுக் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்கள் உள்ளனர். இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப், 563 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் சமீபகாலமாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ட்விட்டர் இந்தியாவில் 90 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது. மெட்டா உலகம் முழுவதும் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மெட்டாவின் 2 மூத்த தலைவர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், மெட்டா இந்தியாவின் தலைவரான அஜித் மோகன் தனது பொறுப்பில் இருந்து விலகினார்.
வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட், “இந்தியாவில் எங்கள் முதல் வாட்ஸ்அப் தலைவராக இருந்த அபிஜித் போஸ் மகத்தான பங்களிப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது சேவை இந்தியாவில் மில்லியன் கணக்கான பயனர்கள், வணிகத்துறைக்கு பயனளிக்கும் புதிய சேவைகளை வழங்க உதவியது. இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்த தொடர்ந்து உழைப்போம்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாட்ஸ்அப் பொதுக் கொள்கைகான இயக்குநராக உள்ள ஷிவ்நாத் துக்ரால், மெட்டா ஆப்களுக்கான (பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்) பொதுக் கொள்கை இயக்குநராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil