பேஸ்புக், ட்விட்டர் போன்று இனி வாட்ஸ்அப்பிலும் ‘வெரிஃபைடு’ குறியீடு பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் போலியான கணக்குகள் ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு ஒரு பிரபலமான நபரை எடுத்துக் கொண்டால், அவரது பெயரில் ஏராளமான கணக்குகளை சமூக வலைதளங்களில் காண முடியும். இதேபோல, வணிக நிறுவனம் உள்ளிட்ட பல்வறு நிறுவனங்கள் தங்களுக்கென சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகித்து வருகின்றன.
அந்த பக்கத்தின், நம்பகத்தன்மை வாய்ந்தது தான் என்பதை குறிக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ‘வெரிஃபைடு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நிலையில், வாட்ஸ்அப்பிலும் இதுபோன்ற ‘வெரிஃபைடு’ என்ற வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நீல நிறத்தில் இந்த குறியீடு உள்ளது. வாட்ஸ்அப்-ல் வரவுள்ள இந்த வெரிஃபைடு’ குறியீடு பச்சை நிறத்தில் இருக்குமாம்.
வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் நம்பர்களுக்கு இந்த ‘வெரிஃபைடு’ குறியீடை கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வசதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில், பெயருக்கு அடுத்ததாக இந்த குறியீடு இருக்கும் என்றும், அவ்வாறு இருந்தால் அந்த கணக்கை வாட்ஸ்அப் அங்கீகாரம் செய்துள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.