ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாலே போன் வெடித்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு ககோதாவரி பகுதியில் உள்ள ரவுல்பலிமில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் நிகழ்ந்த இந்த சம்பவத்தின்போது, பாவனா சூர்யகிரண் என்பவர் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை பாக்கெட்டில் வைத்து கொண்டு, மோட்டார் பைக்கில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென அந்த ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதால், அவரது ஆடைகளில் தீ பற்றியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தினால், பாவனா சூர்யகிரணுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.
இது குறித்து பாவனா சூர்யகிரண் கூறும்போது, கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தான் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினேன். ஆனால், இது திடீரென வெடித்து விட்டது. இதற்கு உரிய இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சியோமி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெடித்து சிதறிய ரெட்மி நோட் 4 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போனின் வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. போனின் பின்புற கவர் மற்றும் பேட்டரி சிதைந்துள்ளதோடு, டிஸ்ப்ளே ஸ்கிரீனில் பாதிப்பு ஏற்பட்டதனால், வெடித்துள்ளதாக தெரிகிறது. போனில் மேலும் சில ஆய்வுகள் செய்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தமாக, ஸ்மார்ட்போன்களை பிரித்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும். போன் மீது அதிக அழுத்தம் மற்றும் பேட்டரியை பாதிக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது. சியோமியின் அங்கிகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் மட்டுமே, சியோமி போன்களை பழுது பார்க்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அதற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். பல்வேறு பரிசோதனைகளை கடந்த பின்னரே போன்கள் விற்பனைக்கு வருகின்றன என்று சியோமி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சியோமி நிறுவனமானது ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த போனில் ரிமூவ் செய்ய முடியாத 4,100mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு, சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் பேட்டரி வெடிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால், மில்லியன் கணக்கிலான சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் சுமர் 5 பில்லின் டாலர் தொகை சாம்சங் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.