அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் ஜூம் செயலி நிறுவனம் தனது 15 சதவீத ஊழியர்கள் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அதோடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எரிக் யுவான் தனது சம்பளத்தில் 98% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் ஜூம் செயலி மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டது. அலுவலக மீட்டிங், பள்ளி, கல்லூரி ஆன்லைன் வகுப்புகள், கான்ஃபரன்ஸ் என அனைத்தும் ஜூம் செயலி மூலம் வீடியோ, ஆடியோ கால் முறையில் நடைபெற்றது. போன், லேப்டாப், கணினிகளிலும் ஜூம் செயலி பயன்படுத்தலாம். கிட்டதிட்ட கொரோனா காலத்தில் செயலி மிகப் பெரிய வளர்ச்சி கண்டது என்று கூறலாம். நிறுவனத்தின் வருமானம் அதிகரித்தது.
இந்நிலையில் கொரோனாவிற்கு பின் நிறுவனம் எதிர்ப்பார்த்த அளவு வருமானம் ஈட்ட முடியவில்லை. உலகப் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக பணி நீக்கம் செய்யப்படுகிறது. செலவீனங்களை குறைக்க பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜூம் நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் யுவான் ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயில் செய்தியில், "இந்த செய்தியை சொல்ல மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனாலும், வேறு வழியின்றி நமது திறமையான ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். 1300 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது மொத்த ஊழியர்களில் 15 சதவீதம் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது 98% சம்பளத்தை குறைப்பதாக யுவான் அறிவித்துள்ளார். தனது போனஸ் பலன்களையும் கைவிடுவதாக அறிவித்தார். அதேபோல் தலைமை ஊழியர்களுக்கும் 20 சம்பளக் குறைப்பும் போனஸ் இழப்பும் செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
யுவானின் புதிய சம்பளம்
சி.இ.ஓ எரிக் யுவானின் 2022-ம் ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.24.9 மில்லியன் ஆகும். போனஸ் பலன்கள் ரூ. 1.1 மில்லியன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர் அவர் சம்பளத்தில் 98 சதவீத ஊதியக் குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி 2023 ஆம் ஆண்டில் ஜூம் தலைமை செயல் அதிகாரியின் புதிய சம்பளம் 6,034.62 டாலராக இருக்கும். இது இந்திய ரூபாயில் ரூ.4.9 லட்சம் ஆகும்.
தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கு 16வார சம்பளமும், மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என ஜூம் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/