தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடை பயிற்சிக்குச் சென்றபோது, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டீம் விசாரணை செய்து வரும் நிலையில், இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக சந்தேகத்திற்கு இடமான 13 நபர்களுக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் மோகன்ராம், தினேஷ் , நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சீர்காழி சண்முகம் , சிவ குணசேகரன் ஆகியோர் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று ஆஜராகினர். இந்த வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதில் 13-வது நபரான லெப்ட் ரவி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் 13 ரவுடிகளும் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரப்பட்டது.
தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் விசாரணை அதிகாரியாக இருக்கும் எஸ்.பி., வராத காரணத்தால் மனு மீதான விசாரணையை வருகிற 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
அன்றைய தினம் உண்மை கண்டறியும் சோதனைக்கு உத்தரவிடுமாறு எஸ்.பி. ஜெயக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார் என சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
அன்று அவர்கள் 13 பேருக்கும் பெங்களூருவில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
ராமஜெயம் கொலை வழக்கில் இன்று சந்தேகப்படும் என்று அறியப்பட்ட 13 ரவுடிகள் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு திருச்சி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடும் பட்சத்தில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கும்.
10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் விரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செய்தி: க. சண்முகவடிவேல் – திருச்சி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“