கர்நாடகாவில் சுதந்திர தின விழாவின்போது மேடையில் அமர்ந்திருந்த பெண் எம்.எல்.சி. ஒருவரின் கையை, காங்கிரஸ் தலைவர் ஒருவர் தேவையில்லாமல் பிடித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவர் கையை பிடித்தபோது அந்த பெண் எம்.எல்.சி தடுத்து கையை தட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால், காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Advertisment
கடந்த 15-ஆம் தேதி கர்நாடக மாநில மடிகேரி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில், அக்கட்சியின் மடிகேரி நகர் முன்னாள் தலைவர் டி.பி. ரமேஷ் மற்றும் குடகு மாவட்டத்தின் எம்.எல்.சி.யான வீணா அச்சையா ஆகியோர் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். விழாவில் காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது, தேவையே இல்லாமல், டி.பி. ரமேஷ் வீணாவின் கையை பிடித்தார். அதனை சற்றும் எதிர்பார்க்காத வீணா அவரது கையை தட்டிவிட்டார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது. இந்நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கட்சிக்குள் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படுபவரான டி.பி. ரமேஷ், வீணா தன்னுடைய சகோதரி போன்றவர் எனவும், தேவையில்லாமல் அவரது கையை பிடிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
“நாங்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். நான் வீணாவை சகோதரியாக கருதுகிறேன். என்னை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது”, என டி.பி. ரமேஷ் கூறினார். இதனிடையே, டி.பி.ரமேஷ் தவறிழைத்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.
சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.வின்செண்ட் என்பவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் சுமத்தி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து அந்த எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.