சென்னை… நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் பேசும் முக்கிய பொருளாக, இடமாக, உணர்வாக மாறிப்போன வார்த்தை தான் சென்னை. வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் தெருக்களுக்கென்று ஒரு மணம் இருக்கிறது. ஒரு குணம் இருக்கின்றது. அதன் வரலாறோ நீண்டதாகவும், யாராலும் மறக்க இயலாததாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கிக் கொண்டு வருவதாகவும் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இம்மண்ணில் அடியெடுத்து வைத்த நாட்களுக்கு முன்பில் இருந்து துவங்கியிருக்கிறது சென்னையின் வரலாறு. இன்று போல் அன்று மக்கள் நெருக்கடியும் கூட்டமும் குறைவாய் இருந்ததால், எந்த பகுதியில் எப்போது, எந்த மக்கள் வந்து குடியேறினர் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையிலும் இருந்தது. சென்னை மாகாணத்தின், இன்றைய மாநகரின், வரலாற்றில் முதல் அடியை நாம் சௌகார்பேட்டை சாலைகளில் எடுத்து வைப்போம்.