சாராய வியாபாரத்தில் ஆரம்பித்து, ஏழு கொலை வழக்குகள் எண்ணற்ற எதிரிகள் மற்றும் ரசிகர்களுடன் ரியல் எஸ்டேட் தாதாவாக வளர்ந்த தனபாலன் ஸ்ரீதரிடம் அருண் ஜனார்த்தனன் பேசியதிலிருந்து:
சென்னையில் தென்மேற்கே உள்ள கோவில் நகரான காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு ஜனவரி 3-ம் தேதி நள்ளிரவு கடந்த சமயத்தில் ஒரு தொலைபேசி வந்தது. தான் யார் என்பதை அந்தக் குரல் சொல்லக் கேட்டதும், அந்த ஆய்வாளர் அதிர்ந்தார். அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் தமிழ்நாடு காவல் துறையால் தீவிரமாகத் தேடப்படும் நபரான தனபாலன் அல்லது தாதா ஸ்ரீதர். இவர் மீது ஏழு கொலை வழக்குகள் உள்பட 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்ட தனபாலன், தனது குழுவைச் சேர்ந்த வேறு யாரையாவது போலீசார் கைது செய்தால், அடுத்த 15 நிமிடங்களில் அந்தப் பகுதியில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த மிரட்டல் வந்த சமயத்தில், அந்தக் காவல் நிலையத்தில், குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனபாலனின் சகோதரர் உள்பட குறைந்தது ஏழு பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அடுத்த நாள் வேலூர் சிறையில் ரிமான்டில் அடைக்கப்பட இருந்தனர்.
டி.ஜி.பி. அஷோக் குமாரிடம் தனது தகவலைத் தெரிவிக்கும்படி தனபால் கூறியதை அடுத்து அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கள்ளச் சாராய வியாபாரியாக இருந்து, துபாயில் ரியல் எஸ்டேட் தாதாவாக வளர்ந்த இவரது கதையில் இந்த தொலைபேசி மிரட்டல் புதிய அத்தியாயமானது. சூதாட்ட விடுதிக்குச் செல்வது தனது வாடிக்கை என கூறியுள்ள இந்த தாதாவின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடி என்பது போலீசாரின் கணக்கு.
இது தொடர்பாக விவரம் அறிய டி.ஜி.பி. குமாரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வடக்கு மண்டல ஐ.ஜி.பி. பி. தாமரைக்கண்ணனும் உடனடியாகத் தகவல் தரவில்லை. காஞ்சிபுரம் இவரது போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது. ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் தனபாலிடமும் – பத்திரிகைக்கு இதுதான் அவரது முதல் பேட்டி – பெயர் வெளியிட விரும்பாத காவல் துறை அதிகாரிகளிடமும் இந்த தாதாவின் முன்னாள் சகாக்களிடமும் பேசியது. சிறிய அளவில் கள்ளச் சாராயம் விற்றவர், ஸ்ரீதர் அண்ணா என்ற பயங்கர தாதாவாக உருவான கதையை அறிய முடிந்தது.
இணையதளம் வழியாக எடுக்கப்பட்ட வீடியோ நேர்காணலில், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தனபாலன் மறுத்தார். துபாயிலிருந்து அவர் விடுத்த தொலைபேசி மிரட்டல் பற்றி கேட்டபோது, “அந்த இன்ஸ்பெக்டர் எனது ஆட்களை அவமானப்படுத்துவதாகத் தகவல் கிடைத்தது. ஒரு ஐ.ஜி. வீட்டுத் திருமணத்திற்காக நான் பணம் செலவழித்திருக்கிறேன். அவருக்காக சொத்து வாங்கிக் கொடுத்தேன். குண்டர் சட்டத்தில் இரண்டு வருடங்கள் என்னைச் சிறையில் அடைத்தது அவர்தான் (அந்த ஐ.ஜி.)” என்று பதிலளித்தார்.
போலீஸ் ஆவணங்களின்படி தனபாலன் பல தடவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2013-ம் ஆண்டு ஆரம்பத்தில் ஆறு மாத சிறைந்த்தண்டனையை பூர்த்தி செய்திருந்தார். அதன் பிறகு உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டார்.
தனது ‘ஆட்களை’க் கைது செய்த இன்ஸ்பெக்டர் ஊழல் பேர்வழி என தனபாலன் குற்றம் சாட்டினார். “அந்த எஸ்.பி. பேசலாம், அவர் ஒரு நேர்மையான மனிதர். ஏ.எஸ்.பி. பேசலாம் அவரும் ஊழல் அதிகாரி அல்ல என்று அவரிடம் (இன்ஸ்பெக்டர்) கூறினேன். சுமார் 75,000 ரூபாய் செலவில் அந்த (போலீஸ்) ஸ்டேஷனுக்கு ஓராண்டுக்கு முன்னர் டைல்ஸ் போடுக் கொடுத்தேன். இப்போது அவர் ஊழல் பற்றிப் பேசுகிறார்” என தனபாலன் புகார் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. டைல்ஸ் போட்டுக் கொடுத்ததாக தனபாலன் சொல்வது ‘உண்மையாக இருக்கலாம்’ என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். போலீஸ் கான்ஸ்டபிளிலிருந்து ஆரம்பித்து நிர்வாகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் தனபாலன் லஞ்சம் கொடுத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
ஆரம்ப நாட்கள்
தனபாலனின் நெருங்கிய சகா ஒருவர் அவர் ‘நல்ல மனசுக்காரர்’ என்கிறார். தனபாலன் ஒரு சமயத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாகவும் அவர் கூறினார். சிங்கப்பூர் சூதாட்ட விடுதிகளில் அவர் ஆயுட்கால உறுப்பினர். உல்லாசப் படகுகளில் பொழுது போக்குவார். துபாயில் சொகுசு பங்களா, ஆடம்பர டாக்சி சர்வீஸ் மற்றும் எண்ணெய் பிசினஸ் ஆகியவை உள்ளன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர்களை துபாயில் டிரைவர்களாக வேலைக்கு வைத்துள்ளார். அவர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து உணவு கொடுப்பார். காஞ்சிபுரத்திலிருந்து தனது பழைய நண்பர்களை துபாயில் நடைபெறும் ஷாப்பிங் விழாக்களுக்கு வரவழைப்பார். எங்களுக்கு எப்போது என்ன தேவை ஏற்பட்டாலும் உதவி செய்யும் அன்பான மனிதர், அவர். ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.”
போலீஸ் ஆவணங்களின்படி, தனபாலன் 1972, ஜுன் 12-ம் தேதி பிறந்தவர். காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர். “எனது அப்பா, விவசாயத் தொழிலாளி.
அம்மா உடல் ஊனமடைந்தவர். அப்பா குடிகாரர் என்பதால், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது, என் அம்மா அப்பாவின் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். ஏழாம் வகுப்பு வரைத்தான் நான் படித்துள்ளேன். பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு நெசவு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்,” என்று தனபாலன் கூறினார்.
தனது மூன்று குழந்தைகளுடன் அம்மா அவர் வீட்டுக்கு திரும்பியதாகவும், அங்கு குழந்தை இல்லாத தனது அம்மாவின் அக்கா தன்னை தத்து எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். 1984 வாக்கில், பள்ளியிலிருந்து நின்று விட்ட தனபாலன் அடுத்த எட்டாண்டுகள் வரை பட்டு நெசவாளர்களுடன் வேலை பார்த்ததாக அவரது சகாக்கள் கூறுகின்றனர். “எனது எல்லா அதிர்ஷ்டங்களும் கஷ்டங்களும்” நான் கள்ளச் சாராயம் விற்கத் தொடங்கிய 1992-ல்தான் ஆரம்பமாகின. இந்த வியாபாரத்தை 2008 வரை தொடர்ந்து நடத்தினேன்,” என்று தனபாலன் கூறினார்.
திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டி, முதலில் தான் தொடங்கிய கள்ளச் சாராய வியாபார நாட்களை நினைவுகூர்ந்தார். “உயிரைவிட மானம் பெரிது” என்ற குறள் வரியை மேற்கோள் காட்டி, தனது வியாபாரத்தை மிகவும் கண்ணியமான முறையில் நடத்தியதாகக் கூறினார்.
வியாசரின் மகாபாரதம், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் ஆகியவற்றைச் சிறு வயதிலிருந்தே தான் படிக்கத் தொடங்கியதாகக் கூறிய அவர், “உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், நீங்கள் அந்த நூல்களிலிருந்து என்னிடம் கேள்விகள் கேட்கலாம்” என்றார். சூதாட்ட கிளப்புகள் மீது தனக்கு மோகம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அவர், “சூதாட்டம் எனக்குப் பிடிக்கும்’’ என்றார். சர்வதேச போலீசார் தன்னை தேடுப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதால், தன்னால் சிங்கப்பூருக்குச் செல்ல முடியவில்லை என்றும் கூறினார்.
“2013-ல் நான் இந்தியாவிலிருந்து வெளியேறினேன். கடந்த ஆண்டு எனது இந்திய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதிர்ஷ்டவசமாக எனது துபாய் பிசினஸ் விசா 2017 வரை செல்லுபடியாகும்” என்றார். தனது பிசினஸ் பற்றி கூறிய தனபாலன், ‘ஆயில் வியாபாரத்தில்’ தான் ஈடுபட்டுள்ளதாகவும் மாதம் 1.2 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறினார். “இந்தியாவைப் போல் அல்லாமல், இங்குள்ள கட்டுமான இடங்களில் ஜெனரேட்டர்கள் தேவைப்படுகின்றன. பொது மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாது. எனவே, கட்டுமான இடங்களில் உள்ள ஜெனரேட்டர்களுக்காக நான் டீஸல் சப்ளை செய்கிறேன்” என்று கூறினார். மாதம் தோறும் சுமார் 20 லட்சம் டீஸல் சப்ளை செய்வதாகவும் சொன்னார்.
துபாயில் தான் சொகுசு டாக்சி சர்வீஸ் நடத்துவதாக கூறப்படுவதை தனபாலன் மறுத்தார். “என்னிடம் இரண்டு கார்கள் மட்டுமே உள்ளன. ஒன்று ஆடி, இன்னொன்று (டொயோட்டா) காம்ரி. எனக்கு காமரியே போதும், என் மகனுக்காக ஆடி வாங்கினேன். நான் எப்போதுமே ஆடம்பரமாக வாழும் மனிதன் அல்ல. என்றுமே எளிமையான வாழ்க்கையே நடத்துபவன்” என்று தனபாலன் கூறினார்.
பிறகு புன்னகையுடன் தனது கைக்கேமராவை எடுத்து துபாயில் உள்ள அவரது இரண்டு படுக்கை அறை குடியிருப்பை சுட்டிக் காட்டினார். அந்தக் குடியிருப்பில் ஆடம்பரத்திற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.
கொலை வழக்குகள்
தான் சாதாரணமானவன், ஏதும் அறியாதவன் என்று தனபாலன் கூறினாலும், போலீஸ் ஆவணங்கள் அவரது கொடூர செயல்களை பட்டியலிடுகின்றன. அவர் மீது ஏழு கொலை வழக்குகள், 14 “கொலை முயற்சி’’ வழக்குகள் உள்ளிட்ட 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சமீபத்திய தொலைபேசி மிரட்டலும் அடங்கும்.
அவர் மீதான பெரும்பாலான வழக்குகள் ரியல் எஸ்டேட் பேரங்கள் தொடர்பானவை. கள்ளச் சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் அல்லாமல், 1999-லிருந்து பதிவு செய்யப்பட்ட 32 வழக்குகளில், 8 வழக்குகளில் தனபாலன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவற்றில் இரண்டு கொலை வழக்குகளும், இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். ஒரு கொலை வழக்கு ஆறு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது. எஞ்சிய வழக்குகள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
அந்த எஃப்.ஐ.ஆர்.களைப் படித்துப் பார்ப்பவர்கள் “வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரிப்பார்கள்” என்று கூறிய தனபாலன், காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று இன்ஸ்பெக்டர்கள் தன் மீது பொய் வழக்குகளை ஜோடித்துள்ளதாக கூறுகிறார். ஒரு அபார்ட்மன்ட் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளைத் தான் நிராகரித்ததால், இந்தப் பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் கூறுகிறார். இவரது புகார்கள் குறித்து, மூத்த போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
தனபாலன் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டது குறித்த பல சம்பவங்களை போலீசார் பட்டியலிடுகின்றனர். தனபாலனின் 50 சகாக்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். “டிசம்பரில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளரை தொலைபேசியில் கூப்பிட்ட தனபாலன், அவரது சொத்தை தனக்கு விற்பனை செய்யும்படி கேட்டிருக்கிறார். தியேட்டர் உரிமையாளர் மறுத்ததால், தன்னை
கொழும்புவில் சந்திக்கும்படி தனபாலன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் அந்த உரிமையாளர், காவல் துறையில் புகார் கொடுக்க மறுத்துவிட்டார்” என அந்தப் போலீஸ் அதிகாரி கூறினார்.
அந்த தியேட்டர் உரிமையாளருக்கு நெருக்கமான ஒருவர், டிசம்பர் 29-ம் தேதி அந்த உரிமையாளர் கொழும்பு சென்றதை உறுதி செய்தார். “மற்ற விவகாரங்கள் பற்றி என்னால் பேச முடியாது. அந்த தியேட்டருக்கு அருகே தனபாலனுக்கு ஏற்கெனவே ஒரு சொத்து உள்ளது” என்று கூறினார்.
ஆனால், தனபாலன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்: “பாஸ்போர்ட் இல்லாமல் நான் எப்படி கொழும்பு செல்ல முடியும்? இந்த உரிமையாளர் காஞ்சிபுரத்தில் செல்வாக்கான ஒரு அரசியல் தலைவர். அவரைப் போய் முட்டாள்தனமாக நான் துபாயிலிருந்து மிரட்டுவேன் என நீங்கள் நினைக்கிறீர்களா?” எனக் கேட்கிறார்.
தனபாலனின் மிரட்டல் சம்பவங்களை விவரித்த அந்த போலீஸ் அதிகாரி, மற்றொரு சம்பவம் பற்றியும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட ஒரு சொத்தின் உரிமையாளரைத் தொலைபேசியில் மிரட்டிய தனபாலன், அந்த உரிமையாளரின் மகள் படிக்கும் பள்ளிக்கூடம், அவர் வழக்கமாகச் செல்லும் பியூட்டி பார்லர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எல்லாம் பட்டியல் போட்டுள்ளார். கடைசியில் அந்த உரிமையாளர் தனது சொத்தை விற்றுவிட்டார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுத்துவிட்டார்” என அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
நண்பர்களும் எதிரிகளும்
இந்தக் குற்றச்சாட்டை தனபாலன் மறுத்தார், சாராய வியாபாரத்தில் இருந்து 2008-ல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாறியதை, “நான் செய்த ஒரே தவறு இதுதான். இதனால் எனக்கு நிறைய எதிரிகள் உருவாகிவிட்டனர்” என்றார்.
‘ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் வந்து ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என காஞ்சிபுரத்திற்கு பெயர் கிடைத்ததும் நிலத்தின் விலை எகிறியது. அந்த சமயத்தில்தான் தனபாலன் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதாக போலீஸ் அதிகாரிகளும் அவரது சகாக்களும் கூறுகின்றனர்.
தனபாலனுக்குப் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதாக அவரது சகாக்கள் கூறுகின்றனர். அவரது ரசிகர்களின் ஃபேஸ்புக் பக்கம் கடந்த ஜூன் மாதம் அவருக்கு 43 வயதானபோது “ஸ்ரீதர் அண்ணா” வீடியோக்களாலும் அவருக்கான வாழ்த்துகளாலும் நிரம்பி வழிந்தன. சில ரசிகர்கள் ஏழைகளுக்கான நிகழ்ச்சிகளைக்கூட நடத்தினர். அவரது சகாக்கள் மூலம் இந்தியன் எக்ஸ்பிரசுக்குக் கிடைத்த ஏராளமான புகைப்படங்களில், கடந்த மாதம் சென்னையை தலைகீழாகப் புரட்டிப்போட்ட மழை, வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு
விநியோகிப்பட்ட, தனபாலனின் புகைப்படம் இடம்பெற்றிருந்த அரிசி மற்றும் நிவாரணப் பொருள்கள் அடங்கிய பைகளை காண முடிந்தது.
“நான் வெள்ளத்தின்போது சிறிய தொகையை மட்டும்தான், வெறும் 3 லட்சம் ரூபாய்தான் செலவழித்தேன். மிகவும் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நிவாரண உதவி அளிக்குமாறு எனது ஆட்களிடம் கூறினேன். எந்த விளம்பரமும் கூடாது என்று நான் வற்புறுத்திக் கூறினேன்… அது உதவியாக இல்லாமல் விளம்பரமாகத்தான் இருக்கும் என்றும் கூறினேன். அந்த மாதிரி நான் செய்யவே மாட்டேன்,” என்று தனபாலன் கூறினார்.
அவரது எதிர்காலம் பற்றி கேட்டபோது, தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தையும் ஒரு கல்லூரியையும் தொடங்குவது தனது கனவு என்றார், தனபாலன். இந்திய கல்வி முறையை நான் வெறுக்கிறேன். இது லாபத்திற்காகவோ அல்லது தர்மத்திற்காகவோ அல்ல, பின்லாந்தில் உள்ள கல்வி முறையின் தரத்தில் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை திறப்பதுதான் எனது கனவு,” என்ற தனபாலன் உலகத்திலேயே சிறந்த
கல்வி முறை அந்த நாட்டில் உள்ளதைத் தான் படித்துத் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
தனபாலன் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தாலும், பலரும் அவரை ராபின் ஹூடோடு ஒப்பிட்டுப் பேசுகின்றனர் என ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். “ஆனால், எங்களது கூட்டங்களில், தாதா ஸ்ரீதர் அல்லது தமிழ்நாட்டின் தாவூத் இப்ராஹிம் என்றுதான் பேசப்படுகிறார்,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.