அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை, போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவுச் சின்னமாக மாற்றுதல், என தமிழக அரசியல் களமே பரபரப்பாக உள்ளது. இவையெல்லாம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடியொட்டி நிகழ்ந்த சம்பவங்கள். தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என நீங்கள் நொடிக்கு நொடி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கொஞ்ச நேரம் அவையெல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த வீடியோவை பாருங்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு சுதந்திரம் தினம் அன்று கோட்டையில் கொடியேற்ற போர் நினைவு சின்னத்திற்கு வரும் காட்சி. குறிப்பாக சொல்லப்போனால், அவர் இறப்பதற்கு நான்கு மாதங்கள் முன்பு நடந்த சம்பவம். உடலின் எல்லா வலிகளையும் வெளிப்படுத்தாமல் மெல்லிய புன்னகையுடன் நடக்க முடியாமல் நடந்து வருகிறார்.
தன் காரைப் பிடித்துக்கொண்டும், அருகிலுள்ள பாதுகாவலரின் கையைப் பிடித்துக் கொண்டும் மெதுவாக நடந்து வருகிறார்.
ஜெயலலிதாவின் பெயரை சொல்லித்தான் இப்போது வரை அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ‘ஜெயலலிதாவின் வழியில்’ என்றுதான் அதிமுகவின் இரு அணிகளும் காய்களை நகர்த்துகின்றனர். அவருடைய மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களைத் தான் ‘தர்ம யுத்தத்தில்’ போராடி வெளிக்கொண்டு வருவோம் என்கின்றனர்.
எல்லாமே அவரின் பெயரால் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.