இந்தியா மற்றும் பாகிஸ்தானின் 71-வது சுதந்திர தினத்தின்போது பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நடைபெற்றன. அனைத்தையும் நாம் விஷூவல் ட்ரீட்டாக அனுபவித்தோம். குறிப்பாக, தேசிய கொடிக்கு குரல் இருந்தால் அது எப்படி இருக்கும் என கற்பனையாக நவல்தீப் சிங் என்பவரின் கவிதை, சுதந்திர தினத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அன்பை விதைத்து பாடிய பாடல், நடிகர் அமிதாபச்சன் சிறப்பு குழந்தைகளுடன் சைகை மொழியில் பாடிய தேசிய கீதம், பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடிய இந்திய இசைக்குழு, என பலவற்றை கண்டு ரசித்தோம்.
இதில், இந்திய இசைக்குழுவினர் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியதற்காக விமர்சனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்திய தேசிய கீதத்தை மெல்லிய புல்லாங்குழலின் இசையுடன் பாடி வெளியிட்ட வீடியொ நெகிழ்ச்சியாக உள்ளது.
‘தி வாய்ஸ் ஆஃப் ராம்’ (The Voice Of Ram) என்ற சமூக வலைத்தள பக்கம் இதனை ஒருங்கிணைத்து, பாகிஸ்தான் மாணவர்களை இந்திய தேசிய கீதத்தை பாட வைத்தது. லாஹூரில் உள்ள ஃபார்மன் கிரிஸ்டியன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய கீதத்தை பாடினர். இவர்கள் பாடிய தேசிய கீதம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல்.