குழந்தைகளுக்கு கல்வி என்பது முக்கியம் தான், மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது பெற்றோர்கள் கொஞ்சம் கனிவாக நடந்துக் கொள்ளலாம். ஏனென்றால், அந்த குழந்தைகள் அதற்கு தகுதியானவர்கள்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை பார்த்தால் உங்கள் மனம் பதறிவிடும். அதில், ஒரு பெண் குழந்தைக்கு அவரது தாய் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அவரிடம் மிகவும் கொடூரமாக நடந்துகொள்கிறார். அக்குழந்தை பதில் சொல்லக்கூட அவகாசம் தராமல் அடிக்கிறார். அந்தக் குழந்தை தன் தாயிடம் கெஞ்சுகிறது. பாவம், அந்தக் குழந்தை அழுதுகொண்டே, ஒன், டூ, த்ரீ சொல்லும்போது உண்மையில் மனம் கலங்குகிறது. தன் தாயிடம் அக்குழந்தை, தனக்கு கனிவாக பாடம் சொல்லிக் கொடுக்குமாறும், தன்னிடம் அன்பாக நடந்துகொள்ளுமாறும் அக்குழந்தை கெஞ்சுகிறது. ஆனால், அக்குழந்தையின் தாய், அதனை அதட்டுகிறார், அடிக்கிறார்.
அந்த வீடியோவைப் பார்க்கும்போது அந்த தாய்க்கு இரக்கம் இருக்கிறதா என தோன்றுகிறது. இதனை விராட் கோலி தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “குழந்தையின் வலியும் கோபமும் புறக்கணிக்கப்பட்டு, அக்குழந்தைக்கு கற்றுக்கொடுக்கப்படும்போது இரக்கம் முற்றிலுமாக ஜன்னல் வழியாக வெளியேறிவிடுகிறது. இது, அதிர்ச்சியாகவும், மற்றொரு பரிணாமத்தில் வருத்தமாகவும் உள்ளது. இவ்வாறு குழந்தையை மிரட்டினால், அக்குழந்தை ஒருபோது கற்றுக்கொள்ள முடியாது. இது மனதை புண்படுத்துகிறது”, என குறிப்பிட்டிருந்தார்.
சில குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்ளும், சில குழந்தைகள் மெதுவாகத்தான் கற்கும். அதற்காக நாம் எப்படி குழந்தைகளிடம் வெறுப்பை கக்க முடியும்? அவர்கள் மழலையை ரசித்து சொல்லிக்கொடுத்தால் தான் குழந்தைகளுக்கு புரியும்.