அமெரிக்காவை சேர்ந்த ஜியான் ஹார்வே 2 வயதானபோது ‘செப்ஸிஸ்’ எனப்படும் ஒருவித நிரந்தரமான நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டான். அதனால், அவனுடைய மணிக்கட்டிலிருந்து கைகளையும், முழங்காலிலிருந்து பாதம் வரையும் கால்களை நீக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது. அவனுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.
மற்ற குழந்தைகளைப் போல் ஜியானால் சாப்பிட முடியாது. விளையாட முடியாது. எழுத முடியாது. ஆனாலும், அவனிடமிருந்து மெல்லிய புன்னகையும், சிறிய சம்பவங்களிலிருந்து மகிழ்ச்சி காண்பதிலும் அவனிடமிருந்து மறையவில்லை.
அவனுக்கு 4 வயதான போது தொடர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்பு, அவனுடைய அம்மா தன் மகனுக்காக சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்தார். அவருடைய சிறுநீரகம் ஜியானுக்கு பொருந்தியதையடுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
2015-ஆம் ஆண்டு ஜியானுக்கு கை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. உலகிலேயே முதல்முறையாக குழந்தைக்கு கை மாற்று அறுவை சிகிச்சை ஜியானுக்கு தான் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் வெற்றிகரமாக அமைந்தது கூடுதல் மகிழ்ச்சியான தகவல். ஃபிலடெல்ஃபியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கை மாற்று அறுவை சிகிச்சை அவ்வளவு எளிதில் சாத்தியமாகவில்லை. 8 கைகள் ஜியானுக்கு பொருந்தாமல் போகின என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜியான் கைகளை தனக்காக பயன்படுத்தத் துவங்கியிருக்கிறான். ஜியானுக்கு தானம் செய்யப்பட்ட கைகளும், அவனது மூளையும் பொருந்தியுள்ளன. இதனால், அவன் மூளை எதையெல்லாம் செய்ய வேண்டும் என சிந்திக்கிறதோ அதை கைகள் தானாகவே செய்து முடிக்கும்.
இப்போது, ஜியானால் தன் கைகளின் மூலம் எல்லாவற்றையும் தானே செய்துகொள்ள முடியும். அவனே கைகளால் உடைகளை மாற்றிக்கொள்ள முடியும். நண்பர்களுடன் பேஸ்பால் விளையாட முடியும். குதூகலமாக டான்ஸ் கூட ஜியான் ஆடுகிறான். தினமும் தன் கைகளுக்கும், மனதிற்கும் ஏற்ற பயிற்சிகளை ஜியான் மேற்கொள்ளும்போது அவனுடைய கைகளால் கடினமான வேலைகளை கூட செய்ய முடியும்.
ஜியான் தன்னுடைய கைகளால் ஒவ்வொன்றையும் உற்சாகத்துடனும், சிரிப்புடனும் செய்வதைப் பார்க்கும்போது, குழந்தைகளிடமிருந்துதான் நம்பிக்கை பிறக்கிறது என்பது இன்னும் இன்னும் தெளிவாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.