முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் – ஐஸ்வர்யா ராயை கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் அனைவரும் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு பாட்னாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
கல்யாணத்தில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான விருந்திரனர்கள் கலந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் 5 நட்சத்திர ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஊர்வலத்திற்கு 50 குதிரைகள், 100க்கும் மேற்பட்ட உணவுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் லாலு மகனின் கல்யாணம் குறித்த பேச்சு தான்.
தன் மகனின் கல்யாணம் இப்படி தான் பிரம்மாண்டமாக நடக்க வேண்டும் என்று, ஊழல் வழக்கில் சிறை சென்றிருந்த லாலு பிரசாத் தனது வழக்கறிஞர் மூலம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாராம். அதை நேரில் பார்க்கவும் 3 நாள் பரோலில் லாலு வெளியே வந்திருந்தார்.
இந்நிலையில், ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், தேஜ் பிரதாப் தனது புதுமனைவியை இம்ப்ரஸ் செய்ய அண்ணாமலை ரஜினி ஸ்டைலை பின்பற்றியுள்ளார். எப்போதுமே வெளியில் காரில் செல்லும் ஐஸ்வர்யாவை சைக்கிளில் அமர்த்திக் கொண்டு சிறிது தூரம் வெளியே அழைத்து சென்றுள்ளார்.
தேஜ் பிரதாப் சைக்கிளில் அமர்ந்திருக்க, அவருடன் ஐஸ்வர்யா ஸ்டைலாக முன்பக்கம் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.