WEB EXCLUSIVE
‘வான் உயர்வுக்குக் கனவு கண்டால் மலை அளவு சாதிக்கலாம்’ என்பது பழைய பொன்மொழி. ஆனால், திருமதி ஸ்ரீமதி கேசன் ஸ்டைலில் கூற வேண்டும் என்றால் “வான் அளவில் கனவு கண்டால் விண்வெளியையே தொட்டு விடலாம்.” என்பது தான். சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா”-வின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன்.
சகலகலா வல்லவி:
திருமதி ஸ்ரீமதிக்கு தமிழ்நாடு தான் சொந்த ஊர். இருப்பினும், சிறு வயதிலேயே தனது பெற்றோருடன் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்துப் படிப்புகளும் ஹைதராபாத்தில் பயின்றார். பி.காம் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே இவருக்குத் திருமணம் நடந்தது.
இருப்பினும், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஆடல், பாடல், படிப்பு, விவாதம், விளையாட்டு மற்றும் என்.சி.சி உட்பட அனைத்திலும் ஒரு கைப் பார்த்தவர். தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர். மேலும் தேசிய மாணவர் படையில் (என்சிசி) முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தவர். அதன் விளைவாக இவருக்கு மாபெரும் வாய்ப்பு காத்திருந்தது.
என்சிசி-யின் மீதுள்ள ஆர்வத்தில் இவர் சீனியர் அண்டர் ஆபிசராக இருந்து வந்தார். அப்போது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆந்திர மாநிலத்தின் பிரதிநிதியாக பங்குபெற்றார். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து என்சிசி குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகப் படையெடுக்கும் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமை கொள்கிறார் ஸ்ரீமதி.
இப்போது புரிந்ததா இவர் ஏன் சகலகலா வல்லவி என்று? இவரின் சாதனைகள் இதோடு முடியவில்லை. இதன் பிறகு தான் துவங்கியதே.
சட்டன் பிரேக்:
18 வயதில் கல்லூரி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்துக் கொண்டிருந்தார். என்.சி.சி-யில் இவரின் திறனை கண்டு பாராட்டிய, அப்போதைய ராணுவ ஜெனரல் கே.வி.கிருஷ்ணா ராவ், எந்தத் தேர்வும் இல்லாமல் ஸ்ரீமதியை ராணுவத்தில் இணையப் பரிந்துரை செய்வதாகக் கூறினார். இப்படி சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த இந்தத் தருணத்தில் தான் வந்தது ஒரு சடன் பிரேக். வேறென்ன, திருமணம் தான் அது.
திருமணமாகி தன் கணவருடன் சென்னைக்கு வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இத்தம்பதி குட்டி தேவதையும் பிறந்தார். ஸ்ரீமதி போல் கூற வேண்டுமென்றால் “20 வயசுல எங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்தாச்சு. அப்போ நானே சின்ன பொண்ணு. என் கையில் ஒரு பெண் குழந்தை. என் கண்ணுக்கு அவ பார்பி டால் மாதிரி தான் தெரிஞ்சா. எதோ ஒரு பொம்மையை வச்சு விளையாடுறா மாதிரி அவள வச்சி விளையாடுவேன். இப்படியே ஒருதர ஒருதர் வச்சு விளையாடியே ரெண்டு பேரும் சேர்ந்து வளந்துட்டோம்” என்று சிரித்துக்கொண்டார்.
இவ்வாறு காலம் கழிந்தும், தனது வாழ்வில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறோம் என்று நினைப்பதை ஸ்ரீமதி நிறுத்தவே இல்லை. குடும்பத்தை பார்த்துக் கொண்டே பி.காம் முடித்த இவர், பிறகு எம்பிஏ படிப்பையும் முடித்தார். இதன் பிறகு டூரிசம் டிரேவல்ஸ் படிப்பும் பயின்றார்.
சென்னையில் இருந்த காலத்தில், குடும்பத்தை பார்த்துக் கொண்டே, தொகுப்பாளர், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட், டப்பிங், டாகுமெண்டரி படத் தயாரிப்பு என அனைத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார்.
ஷின்சான் ஸ்டைலில் ‘அமைதியோ அமைதி’ என்று செய்து வந்த வேலையெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. தாய் நொஹராவிடம் மாட்டிக்கொண்ட ஷின்சான் போல, குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டார் ஸ்ரீமதி.
வாழ்வின் இலக்கை அறிந்த தருணம்:
டூரிஸம் டிராவல்ஸ் படிப்பை முடித்த ஸ்ரீமதி, உலகைச் சுற்றும் வாலிபராக அவதாரம் எடுத்தார். தனது கணவரும் இவரும் உலகம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்தார். எனவே ஸ்ரீமதியின் பாஸ்போர்ட் அல்லது விசாவில் பெரிதாகக் கடின வேலைகள் எதுவும் இருந்ததில்லை. அப்போது தான் ஒரு அறிய வாய்ப்பு இவரின் கதவை தட்டியது.
ஓர் நன்நாளில் திடீரென்று இவரின் தோழி, ரீமா சிசோடியாவை சந்தித்தார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் எடிட்டர் ஆவார். அன்று ஸ்ரீமதியிடம் அமெரிக்க செல்ல ஒரு அறிய வாய்ப்புள்ளதாகவும், அங்கு ஒரு கான்ஃபெரன்ஸ் நடப்பதாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜாம்பவான்களும், பல சர்வதேச அலுவலகங்களும் பங்கேற்கும் என்று தெரிவித்தார். இந்த வாய்ப்பை தட்டிக் கழிக்காமல், உனடே ஒப்புக்கொண்டார் ஸ்ரீமதி.
அமெரிக்கா செல்ல 6 மணி நேரங்கள் மிஞ்சியுள்ள நிலையில், தனது குடும்பத்திடம் ஒப்புதல் கேட்டு புறப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் நாசா பங்கேற்றது. அப்போது தான் நாசா இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக பயிற்சிகள் நடத்துவதாகவும், இந்தியாவில் இருந்து யாரும் இதில் பங்கேற்பதில்லை என்றும் அறிந்து கொண்டார். இந்த விஷயம் அவருக்கு மன வேதனையை அளித்தது. அந்தத் தருணத்தில் தான் இவர் நாசாவிற்கு குழந்தைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஸ்பேஸ் கிட்ஸ்:
அமெரிக்காவின் நிகழ்ச்சியில் நாசா தனது பிராஜெக்ட் பற்றிப் பேசி முடித்த பின்னர், நாசாவின் அலுவலர்களைச் சந்தித்து ஸ்ரீமதி பேசினார். அப்போது நாசா அளிக்கும் பயிற்சிகள் மற்றும் அப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் கேட்டறிந்தார். இவரின் ஆர்வத்தை அறிந்த நாசா, இந்தியாவின் நாசா பயிற்சி மையத்திற்குத் தலைமை அதிகாரியாக ஸ்ரீமதி நியமனம் ஆவதில் விருப்பமா என்று கேட்டறிந்தனர். இந்த மாபெரும் வாய்ப்பைத் தனது கைவசமாக்கிக் கொண்டார் ஸ்ரீமதி.
இதன் பிறகு இப்பயிற்சிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பணிகளைத் துவங்கினார் ஸ்ரீமதி. முதல்கட்டமாக, 2010ம் ஆண்டு முதல் குழுவாக 108 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றார். இந்தப் பயணம் அவருக்கு மாபெரும் பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. இதற்காக ஸ்ரீமதிக்கு அமெரிக்காவில் இருந்து விருதும் அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியைத் தொடர்ந்தே 2012ம் ஆண்டு “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற பயிற்சி மையத்தைச் சென்னையில் துவங்கினார். 2012ல் 100 மாணவர்களை லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். இதனை இந்திய அரசு வெகுவாக பாராட்டியது. பின்னர் இந்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கேற்றனர்.
இதுபோல இந்த ஆண்டு வரை, மொத்தம் 1500 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் இவர்.
ஸ்பேஸ் கிட்ஸ்-ன் சாதனைகள்:
இதுவரை ஸ்பேஸ் கிட்ஸ் பயிற்சி மையத்தின் மூலம் மூன்று சேட்டிலைட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஸ்ரீமதி மற்றும் அவரின் குழுவின் வழிகாட்டுதலில், மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கியதாகும். இந்த மூன்று சாட்டிலைட்களும் “சப் ஆர்பிடல் லான்ச்” (Sub Orbital Launch) முறையில் விண்ணில் ஏவக்கூடியவை ஆகும். இவற்றில் மூன்று சேட்டிலைகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
1. 2015 - பலூன் சேட்டிலைட் (BALOON SATELLITE )
இந்த சாட்டிலைட் லிம்கா புக் சாதனைப்பட்டியலில் இடம்பெற்றதாகும். இதன் சிறப்பு அம்சம், ஒரு ஹீலியம் பலூனில் உருவாக்கிய சேட்டிலைட்டை பொருத்தி கவனத்துடன் விண்ணில் ஏவுவது தான். பலூன் மூலம் பறந்து செல்லும் இந்த சேட்டிலைட், பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.
2. 2016 - ஸ்கை சேட் (SKI-SAT )
முழுமையாகத் தயாரித்த நிலையில் உள்ள இந்த சேட்டிலைட் இன்னும் சில நாட்களில் விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இந்த சேட்டிலைட் 27 சென்சஸ் கொண்டது. மேலும் இந்த சேட்டிலைட் ரீ யூஸ் செய்துகொள்ளலாம்.
3. கலாம் சேட் (KALAM SAT)
உலகத்தையே திரும்பிப் பார்க்க செய்த சாதனை இது. இதுவரை உள்ள அனைத்து சேட்டிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே மிக சிறிய சேட்டிலைட் ஆகும். மாணவர்கள் படைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிக சிறிய சேட்டிலைட்டை, நாசா விண்வெளி ஆதரவோடு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்தச் சாதனைகளில் இவருக்கு பெரும் துணையாக இருந்தது ஹெக்ஸாநேர் நிறுவனம் என்கிறார். சேட்டிலைட் மற்றும் இதர உருவாக்கங்களுக்குத் தேவைப்படும் பல்வேறு உபகரணங்களை அளிப்பதில் பெரிய உதவியை ஹெக்ஸாவேர் செய்து வருவதாக கூறுகிறார்.
ஸ்பேஸ் கிட்ஸ்-ன் எதிர்காலத் திட்டங்கள்:
இந்தியாவில் மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் செல்வதை போலவே, நைஜீரியாவிலும் மாணவர்களை நாசா அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்பேஸ் கிட்ஸ் மையம் அமைக்க உள்ளதாக ஸ்ரீமதி கேசன் தெரிவித்தார். அடுத்தபடியாக 2019ம் ஆண்டு, நிலவில் செலுத்தும் மிக லேசான வண்டி (LIGHTEST ROVER FOR MOON) தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் விஞ்ஞானிகளை உருவாக்குவதே இவரின் முக்கிய கொள்கை என்றும், இந்த முயற்சியை என்றும் கைவிடாது செயல்பட்டு வருவேன் என்றும் ஸ்ரீமதி கேசன் பெருமை கொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.