இனவாத தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, ட்விட்டர் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும்பாலானோரால் விரும்பப்படும் ‘ட்வீட்டாக’ சாதனை படைத்தது.
முன்னதாக, வர்ஜீனியா மாகாணம் சார்லட்ஸ்வில்லில் வெள்ளை இன மக்களுக்கு ஆதரவாக, இனவாதக் குழுக்கள் கடந்த 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தனர். இதற்கு வர்ஜீனியா மாகாணம் அனுமதி மறுத்ததோடு, அந்நகரில் அவசர நிலையையும் அறிவித்தது.
இருப்பினும், இனவாத குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனவாத குழுக்களுக்கு எதிராக நடுநிலைவாதிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, நடுநிலைவாதிகளுக்கும், இனவாதக் குழுக்களுக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. இதில், கடந்த 12-ஆம் தேதி நடுநிலைவாதிகள் ஈடுபட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, இனவாதக் குழுவை சேர்ந்த ஒருவர் வேகமாக காரை ஓட்டி மோதச் செய்தார். இதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி அமெரிக்க முன்னாள் பிரதமர் ட்விட்டரில் இனவாதத்திற்கு எதிராக பதிவிட்டிருந்தார். அதில், பிறக்கும்போதே யாரும் ஒருவரது நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்பதில்லை”, என பதிவிட்டிருந்தார். அதில், வெவ்வேறு இனத்தை சேர்ந்த குழந்தைகளுடன் தான் ஜன்னல் வழியாக உரையாடும் புகைப்படம் ஒன்றையும் ஒபாமா பகிர்ந்திருந்தார். இக்கட்டுரை எழுதும் வரையில், அந்த பதிவினை 4 மில்லியன் பேர் விரும்பியிருந்தனர். இதுவே, ட்விட்டரில் அதிகம்பேரால் விரும்பப்பட்ட பதிவாகும். 1.5 மில்லியன் பேர் பகிர்ந்தனர்.
இதுகுறித்து ட்விட்டர் அறிக்கை வெளியிட்டது. அதில், “ஒபாமாவின் இந்த பதிவு அதிகமுறை பகிரப்பட்ட பதிவில் 5-வது இடம் வகிக்கிறது.”, என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கடுத்த பதிவுகளில் ஒபாமா, “ஒருவருக்கு வெறுப்பு கற்றுத் தரப்படுகிறது. வெறுப்பு கற்றுத்தரப்பட்டால், அன்பையும் எளிதில் கற்றுத்தர முடியும்.”, என பதிவிட்டார்.
மேலும், “வெறுப்பதைவிட மனிதர்களுக்கு அன்பு மிக இயல்பாக வருகிறது”, என்ற நெல்சன் மண்டேலாவின் மேற்கோளையும் அவர் பதிவிட்டார்.