நவராத்திரி விழா வரும் அக்டோபர் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய யுடியூப் சேனல் ஒன்று, நவராத்திரி விழாவுக்காக அசைவ உணவை பகிர்ந்ததை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள இந்து மத மக்கள், நவராத்திரி விழாவில் கொண்டாடப்படும் துர்கா பூஜையை முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய ‘பாங் ஈட்ஸ்’ (Bong Eats) யுடியூப் சேனலில், துர்கா பூஜை கொண்டாட்டத்திற்காக எனக்கூறி, அம்மாநில மக்களின் மிகப்பிடித்த உணவான ‘முட்டை ரோல்’ (Egg Role) உணவின் செய்முறையை வீடியோவாக பகிர்ந்தார்.
இந்நிலையில், இந்து மக்கள் புனிதமாக கருதும் துர்கா பூஜைக்காக ‘முட்டை ரோல்’ உணவின் செய்முறையை பகிர்ந்ததை பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துர்கா பூஜை அன்று அசைவ உணவை சாப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் அந்த வீடியோவில் கருத்துகளை பதிவிட்டிருக்கின்றனர். இதனால், கொல்கத்தா மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும், துர்காவை கொல்கத்தா மக்கள் முறையாக வழிபடவில்லை என பலரும் விமர்சனங்களை எழுப்புகின்றனர்.
முட்டை ரோல் உணவை பகிர்ந்ததற்கான யுடியூப் சேனலின் விளக்கம்.
ஆனாலும், விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
இந்த கண்டனங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்காக பேசிய, அந்த யுடியூப் சேனலின் இணை நிறுவனர் சப்தரிஷி சக்ரவர்த்தி, “நானும் இன்சியா என்பவரும் இணைந்துதான் ‘பாங் ஈட்ஸ்’ என்ற யுடியூப் சேனலை ஆரம்பித்தோம். கொல்கத்தாவின் முக்கிய உணவுகள் குறித்து ஆவணப்படுத்துவதே எங்களின் நோக்கம். ‘முட்டை ரோல்’ இந்து மக்களுக்கான உணவு மட்டுமல்ல. கொல்கத்தாவில் எல்லா பிரிவினருக்கும் ‘ரோல்’ வகையிலான உணவுகள் இருக்கின்றன”, என கூறினார்.
மேலும், அவர் தன்னுடைய வலைப்பதிவில் இதனை விமர்சிப்பவர்களுக்காக கண்டனம் ஒன்றையும் பதிவிட்டார். அதில், ஒருவரது தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தையும், கலாச்சார நடைமுறைகளையும் விமர்சிப்பதால் சகிப்பின்மை அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். கொல்கத்தா மக்கள் மீது இன ரீதியாக எழுப்பப்பட்ட இந்த விமர்சனத்திற்கு, “எங்களுக்கென தனிப்பட்ட மதச்சடங்குகள், கலாச்சார வேறுபாடுகள் உள்ளன. எங்களுடைய துர்க்கை கீழ்ப்படியும் மாடு அல்ல. தீய சக்திகளை கொலை செய்பவள்”, என பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.