சிசிடிவி கேமராக்களில் பதிவான கொடூரமான விபத்துகள்! உயிர்காக்க சாலை விதிகளை மதிப்பீர்!

சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் போது ஏற்படும் கொடூர விபத்துகள் குறித்த சிசிடிவி காட்சிகள் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைவருக்குமே பயணம் என்பது இன்றியமையாதது தான். முக்கியமாக, ஒரு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனங்களில்  பயணிக்கும் போது சிலர் தங்களது கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றனர்.

சலை விபத்துகளில் சிக்காமல் இருக்க வேண்டுமெனில் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். வாகன ஓட்டிகளின் கண்களின் படும் வகையில் சாலையோரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் பதாகைகள் பல வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பெரும்பாலும் பலர் இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

இதனிடையே, சிசிடிவி-வில் பதிவாகியுள்ள சாலை விபத்துகளின் தொகுப்பை கொல்கத்தா போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர். சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றால் என்ன நிகழ்ந்திருக்கிறது என்ற வகையில் இந்த சம்பவங்கள் அமைந்துள்ளன.

“தலைக்கவசம் உயிர் கவசம், படியில் பயணம் நொடியில் மரணம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எதற்காக? அவற்றை பின்பற்ற வேண்டும் என்பதற்கு தானே. ஆனால், இதை பெரும்பாலான மக்கள் பின்பற்றுவதாக தெரியவில்லை. இது போன்ற சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என கூறும் அரசும் சில அதிரடி நடவடிக்களில் இறங்க வேண்டியது அவசியமானது தான்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர் என அரசு சொல்கிறது. ஆம், அவ்வாறு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் விபத்து கண்டிப்பாக ஏற்படும். முக்கியமாக கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் போன்றவற்றில் பார்க்கும் போது அதிக வாகனங்கள் இருக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அங்கிருந்து தானே வெளியில் வருவார்கள்? அனைவரும் குடித்துவிட்டு அங்கிருந்து வருவார்கள் என கூறவில்லை. ஆனாலும், பெரும்பாலும் குடித்துவிட்டு வாகனங்களில் வருவது அப்படித் தானே. அப்படி இருக்கையில் அங்கேயே அவர்களை பிடித்து விடலாமே.

மேலும், “படியில் பயணம் நொடியில் மரணம்” என்கிறீர்கள். படியில் பயணம் செய்வது ஆபத்தானது தான் என்ற போதிலும், அதில் பயணம் செய்பது பெரும்பாலும் பாமர மக்களும், நடுத்தர மக்களும் தான். தங்களின் பொருளாதார நிலையால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு. அதாவது, காலை மற்றும் மாலை வேளைகளில் தான் அதிக மக்கள் பயணம் செய்கிறார்கள் என எடுத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு அதிக பேருந்துகளை அரசு இயக்கலாமே?

அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்குவதன் மூலம் மக்களும் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்வார்கள். பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டம் குறையும் பட்சத்தில், படியில் தொங்க வேண்டிய நிலையும் இருக்காது.
இவ்வாறு அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற போதிலும், தனி நபராகவும் நாம் சாலை விதிகளை பின்பற்றுதல் முக்கியமானது தான். குறிப்பாக, சாலையில் செல்லும் போது செல்போன்களை பயன்படுத்துவது, சில நேரங்களில் உங்களின் உயிருக்கே உலை வைப்பதாக அமையலாம். ஹெட்செட் போட்டுக்கொண்டு ஹாயாக வாகனம் ஓட்டுவது சுகம் தான் என்ற போதிலும், அதனால் ஏற்படும் விபத்தை பார்த்துவிட்டால் ஹெட்செட்டுக்கு இனி ‘பாய்’ சொல்லிவிடுவீர்கள்.

வாகனத்தில் செல்லும் போது விதிமுறைகளுக்கு மாறாக தவறான பாதையில் திரும்புவது, வேகமாக செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது என பல்வேறு நிகழ்வுகள் சாலை விபத்து ஏற்பட இடம் கொடுக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பின்பாவது சாலை விதிகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

×Close
×Close