கேன்சரால் உயிரிழந்த சிறுமி... கல்நெஞ்சக்கார தந்தையிடம் பணஉதவி கேட்டு கெஞ்சிய விடியோ!

ஆந்திர மாநிலத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி, தான் உயிரிழக்கும் முன்பு சிகிச்சைக்காக தனது தந்தையிடம் பண உதவி கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மனதை உருக்கும் வகையில் உள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசிந்து வந்தவர் ஸ்ரீசாய். 13-வயதேயான அந்த சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே தனது சிகிச்சைக்கு அதிக செலாவகும் என்பதால் வீட்டை விற்று என்னை காப்பாற்றுங்கள் என அவரது தந்தைக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பான வீடியோவில் அந்த சிறுமி பேசுகையில், டாடி, நான் சிகிச்சை எடுக்கலன்னா ரொம்ப நாள் உயிர் வாழ மாட்டேன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. எனக்கு சிகிச்சை அளிக்க உங்ககிட்ட பணம் இல்லன்னு சொன்னீங்க. ஆனா நம்மகிட்ட வீடு இருக்கு. அத விற்றாவது என்னை காப்பாத்துங்க, டாடி. ஏதாவது செய்து என்னை காப்பாத்துங்க, டாடி. மற்றவங்கள போல நானும் ஸ்கூலுக்கு போகனும்னு ஆசையா இருக்கு. எனக்கு இந்த சிகிச்சை முடிஞ்சுதுன்னா என்னால ஸ்கூலுக்கு போக முடியும். என்னோட உடல்ல நிறய இடத்துல காயம் இருக்கு. எனக்கு சிகிச்சை அளிக்க அம்மாகிட்ட பணம் இல்ல. உங்க பணத்த அம்மா எடுத்துப்பாங்கனு நீங்க நினைச்சா, நீங்களே என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க, டாடி. என அந்த வீடியோவில் உருக்கமாக கூறியிருந்தார்.

இந்த வீடியோவை ஸ்ரீசாயின் தாய் சுமாஸ்ரீ பதிவு செய்தார். மேலும், அந்த வீடியோ வாட்ஸ்அப் மூலமாக ஸ்ரீசாயின் தந்தைக்கு அனுப்பிய போதிலும், இது தொடர்பாக அவர் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை என ஸ்ரீசாயின் தாய் சுமாஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார்.

மனதை உருக்கும் வகையில் இருக்கும் இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரல் ஆனதால், ஷிவகுமார், தனது மனைவி சுமாஸ்ரீ மற்றும் மகள் ஸ்ரீசாய் ஆகியோரை வீட்டில் இருந்து வெளியேற்றியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட வேண்டும் என குண்டர்கள் மூலம் மிரட்டலும் விடுத்திருக்கிறார் ஷிவகுமார்.

அந்த குண்டர்களுக்கு தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏ போன்டா உமாமகேஷ்வராவின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அந்த குண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லையாம். இந்நிலையில், பாலல ஹக்குல சங்கத் தலைவர் அச்சுதா யாதவ் கூறும்போது: இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பணத்தை கொண்டுவர தன்னால் முடியும் என்ற போதிலும், தனது மகளுக்காக பணம் கொடுக்க மறுத்து, மிரட்டலும் விடுத்திருக்கிறார் அந்த கல்நெஞ்சக்கார தந்தை. சிகிச்சை அளிக்கப்படாததால் அந்த சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸ் கமிஷ்னருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

×Close
×Close