இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம், அதற்காக சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்துள்ளது. அந்த கூகுள் டூடுள் இந்தியாவின் பெருமைகளை குறிக்கும் விதமாக உள்ளது. பார்ப்போர் எல்லோரையும் கவருகிறது கூகுள் டூடுள்.
இந்திய நாடாளுமன்றம், அசோக சக்கரம், கண்கவரும் வண்ணத்திலான தேசிய பறவை மயில், காவி, பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்திலான தேசிய கொடி ஆகியவை கூகுள் டூடுளில் இடம்பெற்றுள்ளது.
இந்த சிறப்பு கூகுள் டூடுல் மும்பையை சேர்ந்த கலைஞ்சரான சபீனா கார்னிக் என்பவர் வடிவமைத்தார். இவர் காகிதத்தில் கலை வண்ணம் புரிவதில் வல்லவர். இதுகுறித்து கூகுள் தரப்பில் கூறப்பட்டதாவது, "கார்னிக் காகித கலையை பயன்படுத்தி இந்த சிறப்பான கூகுள் டூடுளை வடிவமைத்துள்ளார். அதனால், அந்த கூகுள் டூடுள் தைரியமானதாகவும், வண்ணமயமானதாகவும் அமையக்கூடிய இன்றைய நிகழ்வுகளின் கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்றம் இன்றைய நாளையும், சுதந்திர போராட்ட இயக்கத்தையும், சுதந்திரத்தின் வெற்றியையும் உணரும் வகையில் அமைந்துள்ளது." அந்த டூடுளில் இடம்பெற்றுள்ள 'கூகுள்' என்ற வார்த்தையானது, தேசியக் கொடியின் ரிப்பன்களால் ஆனது போன்ற தோற்றத்தில் உள்ளது. இதற்காக காகிதக்கலையின் பல்வேறு அம்சங்களான மடித்தல், அடுக்குதல் உள்ளிட்டவற்றைன் பயன்படுத்தி 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைத்தார்.
இந்த கூகுள் டூடுள் வடிவமைப்பில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
கடந்த வருடங்களில் சுதந்திர தினத்தின்போதும் கூகுள் நிறுவனம் வெவ்வேறு எண்ணங்களில் டூடுள் அமைத்து கொண்டாடியுள்ளது. 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டூடுளில், கூகுள் என்ற வார்த்தையில் இடம்பெறும் இரண்டாவது 'O' என்ற வார்த்தையின் இடத்தில் பூ வடிவிலான தேசிய கொடி இடம்பெற்றது. மேலும், செங்கோட்டை (நாட்டின் சுதந்திரத்தை உணர்த்தும் வகையில் ஜவஹர்லால் நேரு கொடியேற்றும் தோற்றத்தில் அமைந்திருந்தது), மயில் ஆகியவை இடம்பெற்றிருந்தன.