பாகிஸ்தானிற்கு இந்தியாவின் நெகிழ்ச்சியான சுதந்திரதின பரிசு! ஆர்ப்பரிக்கும் பாக்., மக்கள்!

பாகிஸ்தானின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, 'இந்தியன் அகபெல்லா பேண்ட் வாக்ஸ்சார்ட்' குழு பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடி வெளியிட்டுள்ளது

‘பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறல்.. இந்திய நிலைகள் மீது தாக்குதல்’ என்பது போன்ற வார்த்தைகளை தான் நாம் தினம் தினம் பார்த்து வருகிறோம். இதையே அப்படியே மாற்றி, பாகிஸ்தான் எனும் இடத்தில் இந்தியா என பெயர் மாற்றம் செய்து, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. நம்மைப் போலவே, அந்நாட்டு மக்களும் இதை தினமும் பார்த்து வருகின்றனர்.

ஒரு விளையாட்டில் கூட இந்தியா – பாகிஸ்தான் மோதினாலும், அது உணர்வு ரீதியாக பார்க்கப்படுகிறது. இந்தியா தோற்றால், டெல்லியில் டி.விக்கள் உடைக்கப்படுகின்றன. பாகிஸ்தான் தோற்றால், கராச்சி கலவரமாகிறது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (நாளை மறுநாள்) இந்தியா தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 (நாளை) பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, இந்தியாவைச் சேர்ந்த ‘இந்தியன் அகபெல்லா பேண்ட் வாக்ஸ்சார்ட்’ குழு பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. “ஹேப்பி பர்த்டே பாகிஸ்தான்” என்றும் அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

இரண்டு நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோ, பாகிஸ்தான் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும், இந்தியாவிற்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close