ஃபேஸ்புக்கில் பெண்ணுக்கு தரக்குறைவாக பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு முகநூலில் தரக்குறைவாக பாலியல் மிரட்டல் கொடுத்த கொல்கத்தாவை சேர்ந்த இளைஞரை கொல்கத்தா காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண்ணுக்கு முகநூலில் தரக்குறைவாக பாலியல் மிரட்டல் கொடுத்த கொல்கத்தாவை சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தியாவை சேர்ந்த 20 வயது நிரம்பிய பெண் ஒருவர், ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்துக்கொண்டே படித்து வருகிறார். இவர் சமீபத்தில், தன் சகோதரனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை முகநூலில் பகிர்ந்திருந்தார். அதில், அப்பெண்ணுக்கு முன்பின் தெரியாத அக்னீஷ்வர் சக்ரபர்த்தி என்பவர், பின்னூட்டத்தில் ஸ்மைலி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். தெரியாத நபர் ஒருவர் ஸ்மைலியை கருத்தாக பதிவிட்டதால், அப்பெண் அக்கருத்தை தன் புகைப்படத்திலிருந்து நீக்கி விட்டார்.

இதையடுத்து, நடந்தவைதான் இணையத்தளங்களின் மூலம் எத்தகைய பாலியல் மிரட்டல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதற்கான மோசமான சான்றாக மாற வழிவகுத்திருக்கிறது.

அந்நபர் மீண்டும் அப்புகைப்படத்தின் கீழ் கருத்திட்டார். ஆனால், மிகவும் மோசமான வார்த்தைகளில் அப்பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார். அப்பெண்ணுக்கு மட்டுமல்லாமல், அவரது சகோதரருக்கும் பாலியல் மிரட்டல் விடுத்து கீழ்த்தரமான வார்த்தைகளால் கருத்திட்டிருந்தார்.

இதையடுத்து, Shontu என்ற இணைய துன்புறுத்தலுக்கு எதிரான அமைப்பை சேர்ந்த கரீஷ்மா என்பவர் அப்பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதனை பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பினர். குறிப்பாக, பாடகி சின்மயி உள்ளிட்ட பிரபலங்களும் இதனை ட்விட்டரில் பகிர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொல்கத்தா போலீசார், அப்பெண்ணுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த அக்னீஷ்வர் சக்ரபர்த்தியை கைதுசெய்தனர்.

×Close
×Close