மும்பையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய காவ்ல நிலையத்துக்கு வந்த இளைஞருக்கு, போலீசார் பிறந்த நாள் கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், மக்களுக்கு பயனுள்ள பல தகவல்கள் பகிரப்படும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நட்புறவுடன் உணர்த்து பல பதிவுகளை அந்த ட்விட்டர் பக்கத்தில் காணலாம். இதனால், இந்த ட்விட்டர் பக்கத்திற்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இப்போது, அந்த ட்விட்டர் பக்கத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்காக காவல் நிலையம் வந்த இளைஞருக்கு பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் உள்ள சாகினாகா பகுதி காவல் நிலையத்திற்கு அனிஷ் என்ற இளைஞர் புகார் தெரிவிக்க வந்திருக்கிறார். அப்போது, அவர் அளித்த விவரங்களின்படி அன்றைய தினம் அவருடைய பிறந்த நாள் என்பது போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. உடனேயே, ஒரு கேக் வாங்கி அவருடைய பிறந்தநாளை போலீசார் கொண்டாடினர். பலரும் இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.