வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டமொன்றில் பிரதமரின் பெயரை மாற்றி மன்மோகன் சிங் எனக்கூறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக அரசின் அமைச்சர்கள் அவ்வப்போது ஏதாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அல்லது, அடிப்படை ஆதாரமற்ற செயல்களை செய்து மக்களின் நகைப்புக்கும், கேலிக்கும் ஆளாவார்கள். அந்த அடிப்படையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டமொன்றில் பிரதமரின் பெயரை மன்மோகன் சிங் என மாற்றி கூறிய வீடியோ நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், “டெங்கு தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் இருந்தபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஒற்றுமை உணர்வுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை டெல்லிக்கு அனுப்பினார். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழகத்தில் நிலவும் டெங்கு நிலவரம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் எடுத்துக்கூறினார்”, என, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
அட, அமைச்சர் வாய் தவறி பேசியிருக்கலாம் என்கிறீர்களா? சரி இதை விட்டுவிடலாம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் எனக்கூறியவர்தானே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதன்பிறகு, “சசிகலா கூறியதைத்தான் நாங்கள் கூறினோம். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய். மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்”, என கூறினாரே, இதையும் வாய்தவறிதான் உளறிவிட்டாரோ?