”மத்தியபிரதேசத்தின் சாலைகள், அமெரிக்க சாலைகளைவிட சிறந்தது”: முதலமைச்சர் கருத்துக்கு நெட்டிசன்கள் கேலி

மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள், அமெரிக்காவில் உள்ள சாலைகளை விட சிறந்தவை என, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கருத்து தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள், அமெரிக்காவில் உள்ள சாலைகளை விட சிறந்தவை என, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்த கருத்துக்கு, பலரும் ட்விட்டரில் கேலியாக கருத்திட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் அமெரிக்கா – இந்தியா இருநாட்டு உறவு குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கலந்துகொண்டு பேசியபோது, மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சாலைகள், அமெரிக்க சாலைகளைவிட சிறந்தவை என பேசினார். “வாஷிங்டன் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணித்தபோது, மத்திய பிரதேச சாலைகள் அமெரிக்க சாலைகளைவிட சிறந்தவை என்று தோன்றியது”, என கூறினார். மேலும், 1.75 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளை அமைத்து, கிராமங்களை இணைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், உண்மையிலேயே மத்திய பிரதேசத்தின் சாலைகள் எப்படியுள்ளன என, புகைப்படங்களுடன் நெட்டிசங்கள் #MProads என்ற ஹேஷ்டேகை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். பலரும், குண்டும் குழியுமான சாலைகள், சாதாரண மழைக்கே தாங்க முடியாதவைதான் மத்திய பிரதேச சாலைகள் என புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்டு, சிவராஜ் சிங் சௌஹான் கருத்தை கேலி செய்துவருகின்றனர்.

அவற்றில் சிலவற்றை காணுங்கள்.

×Close
×Close