ஏலியன்களுடன் சண்டையிடும் பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு சிறுவன்: பதில் கடிதம் அனுப்பிய நாசா

ஏலியன்களிடமிருந்து பூமியை காக்கும் பணிக்கு நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் தான் அப்பணிக்கு சேர விரும்புவதாக நாசாவுக்கு கடிதம் அனுப்பினார்.

ஏலியன்களிடமிருந்து பூமியை காக்க அதிகாரி ஒருவரை நியமிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை வெளியிட்ட நிலையில், அந்த பணிக்கு அமெரிக்காவை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் தான் அப்பணிக்கு சேர விரும்புவதாக நாசாவுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்திற்கு நாசா நிறுவனம் பதில் கடிதம் அனுப்பியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர் ஜாக் டேவிஸ், தான் பிரபஞ்ச பாதுகாப்பு அதிகாரி பணிக்கு சேர விரும்புவதாக தன் கைப்பட எழுதிய கடிதத்தை நாசாவிற்கு அனுப்பினார்.
அந்தக் கடிதத்திற்கு நாசா நிறுவனம் பதில் கடிதமும் அனுப்பியது. இதனை நாசா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.


அச்சிறுவன் தன் கடிதத்தில், “என் பெயர் ஜாக் டேவிஸ். நான் பிரபஞ்ச பாதுகாப்பு அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கிறேன்.நான் சிறுவனாக இருந்தாலும், இந்த வேலைக்கு நான் ஏற்புடையவனாக இருப்பேன். ஏனென்றால், என்னுடைய சகோதரி நான் ஏலியனைப் போல் இருப்பதாக கூறுவார். நான் எல்லாவித விண்வெளி மற்றும் ஏலியன்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நான் வீடியே கேம்ஸ் நன்றாக விளையாடுவேன். நான் சிறுவன், அதனால், நான் ஏலியன்கள் போல் சிந்திக்கக் கற்றுக்கொள்வேன்.”, என தன் கடிதத்தில் அச்சிறுவன் குறிப்பிட்டான்.

இந்த கடிதத்திற்கு, நாசாவின் பிரபஞ்ச அறிவியல் பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் எல்.க்ரீன், அனுப்பிய பதில் கடிதத்தில், “அன்புள்ள ஜாக், நீ இந்த பிரபஞ்சத்தின் பாதுகாவலன் என எழுதியிருக்கிறாய். அதனால், நாசாவின் பிரபஞ்ச பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பித்திருக்கிறாய். சிறப்பு.

இந்த பணி மிகவும் அருமையானது, மிகவும் முக்கியமானது. பிரபஞ்ச பாதுகாப்பு அதிகாரியின் பணி என்பது, விண்வெளியில் பணிபுரியும் மனிதர்கள், பிரபஞ்சத்தில் உள்ள பல கிரகங்கள் மற்றும் சந்திரன்களை அசுத்தப்படுத்தாமல் கண்காணிப்பது. எங்களுக்கு சிறந்த அறிவிய அறிஞர்கள், பொறியியலாளர்கள் தேவை. அதனால் நீ நன்றாக உனது பள்ளியில் படி. ஒருநாள் நிச்சயம் நாங்கள் உன்னை நாசாவில் சந்திப்போம்.”, என குறிப்பிட்டார்.

மேலும், நாசாவின் பிரபஞ்ச ஆய்வு இயக்குநர் ஜோனார்த்தன் ரால், சிறுவன் ஜாக்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டியதற்காக வாழ்த்தினார்.

×Close
×Close