கடந்த சில ஆண்டுகளாக இந்திய திருமணங்களில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கவழக்கங்கள், சடங்குகள், ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றி, மணப்பெண்கள் புதுமைகளை படைத்து வந்தனர். சமீபத்தில், ராஜஸ்தானில் திருமணங்களின்போது ‘பந்தோரி’ எனப்படும் சடங்கு இருந்தது. அதில், மாப்பிள்ளைக்கு பதிலாக வழக்கத்தை மாற்றி மணப்பெண், குதிரை பூட்டிய ரதத்தில் வலம்வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இப்போது, சென்னையில் நடைபெற்ற திருமணத்திலும் இத்தகைய புதுமை ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனை நிகழ்த்தியவர் மணப்பெண் அல்ல. மணப்பெண்ணின் அம்மா. ராஜேஷ்வரி சர்மா ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருபவர். இவர் பல்வேறு காரணங்களால் கணவரைவிட்டு பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தன் பிள்ளைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார். அவரது மகள் சந்தியா, ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாம் என்பவரை காதலிப்பதாக தன் தாய் ராஜேஷ்வரியிடம் கூறியுள்ளார்.

இதனால், தங்கள் வழக்கம், கலாச்சாரம் எங்கும் சிதறிவிடாமல், அனைத்து சடங்குகளுடன் தன் மகள் திருமணத்தை நிகழ்த்த முடிவெடுத்தார் ராஜேஷ்வரி. இதனால், இரு வீட்டார் குடும்பமும் சென்னைக்கு வந்து சந்திரா – சாம் திருமணத்தை சடங்குகளுடன் நடத்தியுள்ளனர். இதில், புதுமை என்னவென்றால், ‘கன்னியாதானம்’ சடங்கின்போது, மகளை அவரது தந்தைதான் மடியில் அமர்த்தி மாப்பிள்ளைக்கு தாரை வார்த்துக் கொடுப்பார். ஆனால், ராஜேஷ்வரி அந்த வழக்கத்தை மாற்றி, மகளை தன் மடியில் அமர்த்தி ‘கன்னியாதானம்’ செய்துவைத்தார்.

இந்த திருமணத்தை சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் வருண் ஷர்மா என்பவர்தான் புகைப்படங்கள் எடுத்தார். அதனை தன்னுடைய இணையத்தளத்தில் பதிவேற்றினார். இந்நிலையில், ராஜேஷ்வரி தன் மகளுக்கு கன்னியாதானம் செய்யும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

×Close
×Close