'பாய் தூஜ்’ பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தன் சகோதரருக்கு காலால் திலகமிட்டு ஆசீர்வாதம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
’ரக்ஷா பந்தன்’ பண்டிகையைபோன்று உலகம் முழுவதிலும் உள்ள வங்காள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ‘பாய் தூஜ்’. அன்றைய தினம், சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு ஆசீர்வாதம் செய்வர். மேலும், தங்களால் இயன்ற அளவுக்கு சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாடுவர்.
இந்தாண்டு ’பாய் தூஜ்’ பண்டிகை, கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தன்னுடைய இளம் சகோதரருக்கு, காலால் திலகமிட்டு ஆசீர்வாதம் செய்தார். அந்த புகைப்படங்களை அப்பெண்ணின் சகோதரர் சம்ரத் பாசு என்பவர், முகநூலில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களில், மற்றவர்கள் உணர்வுப்பூர்வமாக கண்ணீரை அடக்க முடியாத நிலமையில் இருந்தனர். ஆனால், அந்த சகோதரின் முகத்தில் சந்தோஷத்துடன் தன் சகோதரருடன் ‘பாய் தூஜ்’ பண்டிகையை கொண்டாடினார்.
இந்த புகைப்படங்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இப்புகைப்படங்களை பார்த்த பலர் உணர்ச்சிப்பூர்வமாக கருத்திட்டும், அந்த பெண்ணை வாழ்த்தியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.