இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் கோலாகலமாக எல்லா பக்கங்களிலிருந்தும் கொண்டாடப்பட்டு விட்டது. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் தங்களுடைய கடினமான நிலையிலும் அம்மாநில மக்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் புகைப்படங்கள் நம் மனதை நெகிழ வைப்பதாக அமைகின்றன.
அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீரில் மூழ்கிய பள்ளி ஒன்றில் தேசிய கொடி ஏற்றப்பட்டிருக்கும் புகைப்படம் நம் உள்ளத்தைக் கலங்கடிப்பதாக அமைந்தது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள ஆரம்ப பள்ளியில் மிசானூர் ரஹ்மான் என்ற ஆசிரியரின் துணையுடன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதன் அருகில் மூன்று சிறுவர்களும், அந்த ஆசிரியரும் தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இந்நிலையில், அசாமிலிருந்து மற்றொரு புகைப்படம் வைரலாகி வருகிறது. டி.ஜி.பி. சுல்கான் சிங் என்பவர் புதன் கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், சித்தார்த் நகர், பஹ்ரைத் ஆகிய இரண்டு இடங்களில் வெள்ளம் சூழ்ந்த காவல் நிலையத்தில் முழங்கால் அளவு வெள்ளத்தில் மூழ்கி காவல் துறையினர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகின்றனர்.