மாணவிகளின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக உடைகளை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்

அமெரிக்காவில் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் அதேபோன்ற உடைகளை அணிந்துவந்து தங்கள் எதிர்ப்பை விநோத முறையில் வெளிப்படுத்தினர்.

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் மாணவிகள், தோள்பட்டையிலிருந்து சற்று இறங்கியை கைகளையுடைய ஆடைகளை அணிந்து வந்ததற்கு அப்பள்ளி நிர்வாக கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் அதேபோன்ற உடைகளை அணிந்துவந்து தங்கள் எதிர்ப்பை விநோத முறையில் வெளிப்படுத்தினர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் பெனிட்டோ உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவிகளின் பாதுகாப்பிற்காக எனக்கூறி அவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாணவிகள் தங்கள் உடலை வெளிப்படுத்தும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது.

இந்நிலையில், மாணவிகள் தங்கள் தோள்பட்டையிலிருந்து சிறிது கீழிறங்கிய மேலாடைகளை அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து, அவர்கள் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மதிக்கவில்லை பள்ளி நிர்வாகம் மாணவிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில், அதற்கு மறுநாளே மாணவிகள் எந்த ஆடைகளை அணிந்ததற்காக திருப்பி அனுப்பப்பட்டனரோ, அதேபோன்ற ஆடைகளை மாணவர்கள் அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர். இதன்மூலம், பள்ளியின் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மாணவர்கள் தெரிவித்தனர்.

அந்த ஆடைகளை அணிந்துவந்த மாணவர்களின் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. மாணவர்களின் இந்த தைரியமான எதிர்ப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவி ஒருவர் கூறியதாவது, “எதிலிருந்து எங்களை பாதுகாக்க பள்ளி நிர்வாகம் நினைக்கிறது? எங்களின் மேலாடையை பறித்துக்கொண்டு ஓடும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எங்களை தொடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.”, என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அவமானகரமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கவும், அவர்களை எதிர்காலத்தில் துறை சார்ந்து வளர தயார்படுத்துவதற்காகவும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, அப்பள்ளி நிர்வாகம் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

×Close
×Close