ஜிம்மில் பெண்ணை சரமாரியாக அடித்து, எட்டி உதைத்த இளைஞர்: வேடிக்கைப் பார்க்கும் ஆண்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் பெண் ஒருவரை தலையில் அடித்தும், எட்டி உதைத்தும் இளைஞர் ஒருவர் தாக்கினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் பெண் ஒருவரை தலையில் அடித்தும், எட்டி உதைத்தும் இளைஞர் ஒருவர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ஜிம் ஒன்றில், ஒரு பெண் தன்னிடம் ஆண் ஒருவர் தவறாக நடந்துகொள்வதாக அவர் முன்பே குற்றம்சாட்டினார். அதனால், ஆத்திரமடைந்த அந்த குற்றம்சாட்டப்பட்ட நபர் திடீரென அப்பெண்ணின் தலையில் ஓங்கி அடித்தார். மேலும், தொடர்ந்து அப்பெண்ணின் பின்புறத்தில் எட்டி உதைத்தார். அப்பெண், வலியால் அழுதுகொண்டே அங்கேயே அமர்ந்துவிட்டார். ஆனால், ஜிம்மில் இருந்த மற்ற ஆண்கள் அப்பெண்ணை காப்பாற்ற முன்வராமல், அதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்திற்கு பிறகு அப்பெண்ணை மற்றவர்கள் சமாதானம் செய்ய முயல்கின்றனர்.

இதையடுத்து, அப்பெண் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பின், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் சசிகாந்த் கன்கானே தெரிவித்தார்.

இச்சம்பவம் அதிர்ச்சியாக மட்டுமல்லாமல் வருந்தத்தக்க சம்பவமாகவும் உள்ளது.தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நபரை எதிர்த்து நின்ற பெண், அந்நபராலேயே தாக்கப்படுவதும், அதனை மற்றவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதும் மோசமான நிகழ்வாக உள்ளது.

×Close
×Close