கணவரின் புகை பழக்கத்தால் தொண்டை புற்றுநோய்க்கு ஆளாகி குரலை இழந்த பெண்

தன் கணவனின் புகைப்பழக்கத்தால் அவரது மனைவி தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவலக் கதை, BeingYou என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இன்று பலரையும் அச்சுறுத்தும் ஒரு நோய் புற்றுநோய். மாறிவரும் வாழ்வியல் முறை, உணவு பழக்கம், புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகின்றன. ஆனால், புகை பிடித்தல் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, அவர்கள் மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்படாமல், அவரை சார்ந்திருப்பவர்களும் அந்நோயால் பாதிக்கப்படும் அவலம் ஏற்படுகிறது. அவ்வாறு, தன் கணவனின் புகைப்பழக்கத்தால் அவரது மனைவி தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவலக் கதை, BeingYou என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

நளினி சத்யநாராயணன் (70), இவரது கணவர் புகை பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால், பல்வேறு உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டு கடந்த 2005-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டு நளினிக்கு, தொண்டையில் தீராத வலி எடுத்தது. இதையடுத்து, மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தொண்டை புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. இதனால், தன் குரலையே இழக்கும் நிலைக்கு நளினி ஆளானார்.

”நான் இதுவரை சிகரெட் பிடித்ததில்லை. ஆனால், இப்போது நான் என் குரலையே இழந்துவிட்டேன்”, என வேதனை தெரிவிக்கிறார் நளினி.

”எனக்கு புற்றுநோய் என்றவுடன் நான் உடைந்துவிட்டேன். நான் யாரையும் இதுவரை புண்படுத்தியதில்லை. ஆனால், எனக்கு இது நடந்துவிட்டது. என் கணவர் புகை பிடிக்கும்போது நான் அவரது பக்கத்தில் அமர்ந்திருந்ததால் எனக்கு இந்த நிலைமை.”, என்கிறார் நளினி.

இதையடுத்து, அவருடைய குரல் நாண் அகற்றப்பட்டு, தொண்டையில் அவருக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவிலேயே அவர் பேசுவதற்கு ஏதுவாக சாதனம் ஒன்று அவருக்கு பொருத்தப்பட உள்ளது.

“என்னால் என் எதிர்பார்ப்பை அடக்க முடியவில்லை. ஒரு குழந்தையை போன்ற மனநிலையில் இருக்கிறேன்”, என்கிறார், புற்றுநோயிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீளும் நளினி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close