இன்றைய தினம் இந்தியாவின் 70-வது சுதந்திர தினம். இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஆடம்பரமாக கொடியேற்றி, கண்கவர் அணிவகுப்புகளுடன் இன்றைய தினம் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கலாம். “நாட்டில் ஊழல்வாதிகள் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மாற்றத்தால் வேலைவாய்ப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயிர் காப்பீடு திட்டத்தில் 6.75 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர்.”, என இந்தியாவின் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமை பேசியிருக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் முரண்பாடாக அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீரில் மூழ்கிய பள்ளி ஒன்றில் ஏற்றப்பட்டிருக்கும் தேசிய கொடி நம் உள்ளத்தை கலங்கடிக்கிறது. இந்த சுதந்திர தினம் எல்லோருக்குமானதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள ஆரம்ப பள்ளியில் மிசானூர் ரஹ்மான் என்ற ஆசிரியரின் துணையுடன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதன் அருகில் மூன்று சிறுவர்களும், அந்த ஆசிரியரும் தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துகின்றனர்.