நல்ல ஐடியா: சராஹா ஆப் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்.ஜி.ஓ.

என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘சராஹா’ ஆப்பை பயன்படுத்தி வருகிறது

எல்லோருக்கும் காய்ச்சல் வந்திருக்கு. ‘சராஹா’ காய்ச்சல். நண்பர்கள் மட்டுமில்லாமல் யார் என்றே தெரியாதவர்கள் கூட தங்கள் விவரங்களை வெளிப்படுத்தாமல், இந்த ‘சராஹா’ ஆப் மூலம் கேள்வி கேட்கலாம். குறிப்பாக சொல்லப்போனால் ‘மொட்டைக் கடுதாசி’.

சிலர் மனதிலிருந்து நேர்மையாக சில கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால், அங்கேயும் வந்து ‘ஹாய்’, ‘சாப்பிட்டீங்களா’ என்ற மெசேஜ்களையும் சிலர் மறப்பதில்லை. பெரும்பாலானோருக்கு இந்த ‘ஆப்’ பிடிப்பதில்லை. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைத்தளங்களை திறந்தாலும் ‘சராஹா’ மயமாக காட்சியளிப்பதால் பலருக்கு வெறுப்பு.

ஆனால், சென்னையை சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று, இந்த ஆப் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் அதனை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘சராஹா’ ஆப்பை பயன்படுத்தி வருகிறது. ’அவேர்’ (Aware) என்ற என்.ஜி.ஓ, மனித உரிமைகள், சட்டங்கள், பாலியல் சமத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அமைப்பாகும்.

’சராஹா’ ஆப் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சேவ் தி ஸ்மைல்ஸ்’ (Save the Smiles) என்ற பிரச்சாரத்தை இந்த அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதில், Save the Smiles என்ற சராஹா பக்கத்தில் நுழைந்து, நாம் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பகிர இந்த அமைப்பு ஊக்குவிக்கிறது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் சந்தியன் திலகவதி, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை நாம் நம் குடும்பத்திலும், பள்ளிகளிலும், அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவை அதிகளவில் நடக்கின்றன. இதுகுறித்து நாம் பேசியே ஆக வேண்டும்”, என பதிவிட்டார்.

மேலும், “சராஹா ஆப்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உங்கள் கேள்விகள், உங்களுக்கு நேர்ந்த சம்பவங்கள், உங்களுக்கு இதுகுறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவற்றை எழுதி அனுப்புங்கள்.”, என சந்தியா ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். இவர்களின் முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

×Close
×Close