மழை என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி என்பதெல்லாம் சொல்வதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால், மழைநீர் நிரம்பிய சாலைகள், குண்டும்குழியுமான சாலைகள் சேறும் சகதியுமாக மாறிய காட்சி, போக்குவரத்து பிரச்சனைகள், வெள்ளம் இவையெல்லாம், நாம் மழையால் அடையக்கூடிய சங்கடங்கள்.
அதையெல்லாம் கூட ஏதோ ஒரு விதத்தில் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், ரயிலில் மழைநீர் இறங்கி, கட்டுப்பாட்டு மையத்திற்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என இங்கே ஒரு ரயில் ஓட்டுநர் குடைபிடித்துக் கொண்டே ரயிலை இயக்குகிறார். இந்த விஷயம் பயணிகளுக்கு தெரியுமா?
உண்மைதான். இந்திய ரயில்வே இதையெல்லாம் கவனிக்க வேண்டும். எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது என தெரியவில்லை. ஆனால், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெர்மோ ரயில் நிலையத்தைக் கடக்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அதில், ரயிலின் மேற்கூரை வழியாக மழைநீர் இறங்குகிறது. மழைநீரால் ரயிலின் கட்டுப்பாட்டு மையத்திற்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, குடை பிடித்துக் கொண்டே ரயிலை இயக்குகிறார். கட்டுப்பாட்டு மையம் முழுவதும் மழைநீரில் நனைந்துவிடாமல் இருக்க நாளிதழ்கள் விரித்து விடப்பட்டிருக்கின்றன.
வீடியோவில் ரயில் ஓட்டுநரும், அதனை படம்பிடிப்பவர்களும் பேசுகிறனர். அதில், பல வருடங்களாக இந்த பிரச்சனையை எதிர்கொள்வதாகவும், இச்சமயங்களில் நாங்கள் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
மேலும், கண்காணிப்புடன் இருப்பதில் எந்தவித பிரச்சனையும் தங்களுக்கு இல்லை எனவும், அதனால், வேலை செய்வதில் பல அசௌகரியங்களும் பிரச்சனைகளும் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்டவர்களை இந்த வீடியோ சென்றடைய வேண்டும் என்பதால், அதை பகிருமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.