”நாங்கள் என்ன உடை அணிய வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டாம்”: ஃபேஷன் டிசைனரை வறுத்தெடுத்த பெண்கள்

“எனக்கு சேலை அணிய தெரியாது என நீங்கள் என்னிடம் சொன்னால், அதுகுறித்து நீங்கள் அவமானப்பட வேண்டும்." சப்யசாச்சி முகர்ஜியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“எனக்கு சேலை அணிய தெரியாது என நீங்கள் என்னிடம் சொன்னால், அதுகுறித்து நீங்கள் அவமானப்பட வேண்டும்.”, என கூறிய ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜியை ட்விட்டராட்டிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவின் மிக பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி, “எனக்கு சேலை அணிய தெரியாது என நீங்கள் என்னிடம் சொன்னால், அதுகுறித்து நீங்கள் அவமானப்பட வேண்டும். இது உங்களின் கலாச்சாரம். அதனை நீங்கள்தான் நிலைநிறுத்த வேண்டும்”, என தெரிவித்தார். இந்த கருத்தை அங்கிருந்தவர்கள் பலரும் கைதட்டி வரவேற்றனர்.

சேலை கட்டுவதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பேசினார்.

மேலும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் செல்லும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சேலை அணிந்துகொண்டுதான் செல்வார் என கூறினார்.

”சேலை அணிவது மிகவும் சுலபம். சேலை அணிந்துகொண்டு போரில் பெண்கள் சட்டையிட்டுள்ளனர். நமது பாட்டிகள் சேலை அணிந்துகொண்டே தூங்கியிருக்கின்றனர். காலையில் மடிப்பு கலையாமல் எழுந்துள்ளனர்”, என சப்யசாச்சி தெரிவித்தார்.

மேலும், ஆண்களிடையே வேட்டி கட்டும் வழக்கமும் ஒழிந்துவிட்டதாக சப்யசாச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், பெண்கள் எதனை அணிய வேண்டும் என சப்யசாச்சி தெரிவித்தது பெண்களின் அடிப்படை உரிமைகளை கேள்வி எழுப்புவதாக உள்ளது என ட்விட்டரில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், “பெண்களும் பீர் குடிப்பதால் நான் அச்சம் கொள்கிறேன்”, என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ட்விட்டரில் பெண்கள் பலரும் #GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டேகில் தாங்கள் பீர் அருந்தும் புகைப்படங்களை பகிர்ந்து மனோகர் பாரிக்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close