குழந்தைகளின் உலகம் அன்பு சூழ் உலகு. பெரியவர்கள் பெரிய பெரிய விஷயங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் அவர்கள் சிறியனவற்றில் சந்தோஷமடைகிறார்கள். மழலைத் தன்மையுடன் குழந்தைகள் பேசும் சொற்கள், எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்படுவதில்லை, அடங்குவதில்லை. உலகில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன அவர்களது சொற்கள்.
ஒன்றாம் வகுப்புதான் அந்த சிறுவன் படித்துக்கொண்டிருப்பான் என அவனைப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. அந்த சிறுவனிடம், “ஏன் என் பக்கத்துலயே உட்கார்ந்துட்டிருக்க? போய் உன் இடத்துல உட்காரு”, என்கிறார், ஆசிரியர். அதற்கு அந்த சிறுவன் சொல்லிய வார்த்தைகளுக்கு ‘பெரிய’ மனிதர்களின் அகராதிகளில் அர்த்தம் தேடாதீர்கள். அவன் என்ன தெரியுமா சொன்னான்?
“வேண்டாம் மிஸ். உங்க பக்கத்துலயே உட்காந்துக்குறேன் மிஸ். உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு மிஸ். உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன் மிஸ்”, என சொல்கிறான்.
அதற்கு அந்த ஆசிரியை சிரித்துக்கொண்டே சிறுவனிடம் பேசுகிறார். “உங்களுக்கு மாலை போடுவேன். முத்தம் கொடுப்பேன். உங்கள ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு பெருசா”, என தன் மழலைதனத்துடன் கொஞ்சி பேசுகிறான்.
“எல்லோருமே என் ஃப்ரெண்ட்ஸ்தான் மிஸ். நீங்களும் என் ஃப்ரெண்ட்தான் மிஸ். உங்க ஆரஞ்சு கலர் புடவை ரொம்ப பிடிச்சிருக்கு மிஸ்”, என அன்பை பொழிந்துகொண்டே போகிறான். அவன் உதிர்த்த சொற்கள் எல்லாவும் அன்பின் மொழி. அதனை அவன் அப்படி வெளிப்படுத்தியிருக்கிறான். அந்த ஆசிரியை ‘லவ் யூ டூ’ என சொல்லி அன்பின் முத்தத்தை வழங்கும்போது, அச்சிறுவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
’குற்றம் கடிதல்’ திரைப்படத்தில் வகுப்பறையில் பிறந்தநாள் கொண்டாடும் சிறுமிக்கு, சக மாணவன் முத்தம் தருவான். அதற்கு ஆசிரியை அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்க சொல்லி அந்த மாணவனிடம் கூறுவார். “எதுக்கு மிஸ், உங்களுக்கு பேர்த்டேன்னா உங்களுக்கும் கிஸ் கொடுப்பேன்”, என்பான் அந்த சிறுவன். அவ்வளவுதான், அச்சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிடுவார் ஆசிரியை
அப்படியில்லாமல், குழந்தைகளின் அன்புக்கும், முத்தத்துக்கும் விலை மதிப்பேயில்லை என்பதை உணர்ந்து இந்த சிறுவனிடம் அன்போடு பேசும் ஆசிரியையை பாராட்டாமல் இருக்க முடியாது.