உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசுப்பள்ளியில் ஆய்வு நடத்திய கல்வித்துறை அமைச்சர், ஆசிரியை ஒருவரிடம் கேட்ட எளிமையான கேள்விக்கு, அந்த ஆசிரியை சரியான பதிலை அளித்தும், அவர் தவறான பதிலை கூறியதாக அமைச்சர் அவமானப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment
உத்தரகாண்ட் மாநில கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அரவிந்த் பாண்டே. இவர் சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரிடம் அமைச்சர் அரவிந்த் பாண்டே எளிமையான கேள்வி ஒன்றை கேட்டார்.
-1 மற்றும் -1 இரண்டையும் கூட்டினால் என்ன வரும்? என அமைச்சர் அந்த ஆசிரியையிடம் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியை -2 என சரியான பதிலை அளித்தார்.
ஆனால், இதற்கான சரியான பதில் தெரியாத அமைச்சர் அரவிந்த் பாண்டே, அதற்கு 0 என்பது தான் சரியான விடை என கூறினார். அதுமட்டுமல்லாமல், தவறான பதிலை கூறியதாக, வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவரது முன்னிலையிலும், ஆசிரியையை அமைச்சர் அவமானப்படுத்தினார்.
மேலும், ஆசிரியை கைடு வைத்து பாடம் நடத்தியதாகவும், வேறு புத்தகம் வைத்திருக்கவில்லை எனவும் கூறி அமைச்சர் கடுமையாக ஆசிரியையிடம் கடிந்துகொண்டார்.
இச்சம்பவத்தை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் வீடியோவாக எடுத்தனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சரியான பதிலை கூறிய ஆசிரியையை அவமானப்படுத்தியதற்கு கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.