"கலவரங்களே தூர செல்லுங்கள்; ஆயுதங்களே நகருங்கள்": இஸ்ரோ விஞ்ஞானிகளின் சுதந்திர தின பாடல்

இஸ்ரோ விஞ்ஞானிகளின் 'ROCK@Band' என்ற இசைக்குழு மூலம் இந்த பாடல் உருவாக்கப்பட்டள்ளது. இந்த பாடல் தேசப்பற்றை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவுக்காக எத்தனையோ ஏவுகணைகள், செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்போது மற்றொரு பெருமையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்களே இசையமைத்து பாடியுள்ளனர். அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். விண்வெளி பொறியாளர்கள் சங்கத்தில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளின் ‘ROCK@Band’ என்ற இசைக்குழு மூலம் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த பாடல் தேசப்பற்றை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, வங்காளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இந்த பாடலை உருவாக்கியுள்ளனர். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற முக்கிய கருத்தை வலியுறுத்தி பாடல் வரிகள் அமைந்துள்ளன. “கலவரங்களே தூர செல்லுங்கள்; ஆயுதங்களே நகருங்கள்” என்ற வரிகள் இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களிடையே வன்மம் மறைந்து, சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. இடையிடையே பாடலில் ‘நான் ஒரு இந்தியன்’ என்ற வரி இடம்பெறுகிறது. இதில், நாம் எந்த மாநிலத்தவராகவோ, மொழியை சேர்ந்தவராகவோ இருந்தாலும் இந்தியர் என்ற வார்த்தையால் ஒன்றிணைகிறோம் என்பதை குறிப்பிடுகிறது.

“உங்களுடைய மதம் என்ன? எங்களுக்கு தெரிய வேண்டாம்”, “உங்களுடைய சாதி என்ன? எங்களிடம் சொல்லத் தேவையில்லை”, என்ற வரிகள் சகோதரத்துவத்தை குறிப்பிடுவதாக உள்ளது. இந்த சுதந்திர தினத்தில் சண்டை, சச்சரவுகள், கலவரங்கள் ஒழிந்து ஒற்றுமையே நம்மை வழிநடத்த வேண்டும் என்ற விதத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது.

‘நான் ஒரு இந்தியர்’ என்ற தலைப்பில் உருவான இந்த ஆறு நிமிட வீடியோவில், சுமார் 20 விஞ்ஞானிகள் பல்வேறு அழகிய இடங்களில் நின்று பாடுகின்றனர். இந்த பாடலுக்கு இசையமைத்தவர் விண்வெளி பொறியியலாளர் ஷிஜூ ஜி. தாமஸ். சாதி, மத பெயரால் இந்தியர்களை பிரிக்கும் சக்திகளை ஒழிக்க வேண்டும் என்பதை இந்த பாடல் வலியுறுத்துகிறது. இந்த பாடலை காண நிச்சயம் தவறவிட்டு விடாதீர்கள். நமது விஞ்ஞானிகள் 71-வது சுதந்திர தினத்திற்கு ஆற்றிய மிகப்பெரும் மரியாதையாக இப்பாடல் அமையும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close