India Budget Session 2019 : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் இறுதி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழு பட்ஜெட் கூட்டத்தொடராக இருக்கலாம் என்று பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடராகத் தான் இது அமையும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
India Budget Session 2019 - அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்நிலையில் நேற்று, எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்தினை உருவாக்கும் விதத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க : இந்த பட்ஜெட்டில் மத்திய அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் ?
மக்களவை மாநிலங்களவையின் கூட்டத்தில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல் முழு பட்ஜெட்டாக இந்த கூட்டத் தொடர் இருந்தால் அதனை எதிர்க்கட்சிகள் நிச்சயம் எதிர்க்கும் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் - எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்
மேலும் அவர் சிட்டிசன்சிப் மசோதா குறித்தும், ரபேல் டீல் குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
அதிமுக எம்.பி. பொன்னுசாமி வேணுகோபால் காவேரி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் காங்கிரஸ் சார்பில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
சமாஜ் கட்சியின் எம்.பி. தர்மேந்திர யாதவ், கல்வி நிலையங்களில் அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 10 பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் நடத்தப்படும். அவற்றுள் சிட்டிசன்சிப் பில், முத்தலாக் ஆகிய சட்டங்களும் அடங்கும்.
அருண் ஜெட்லிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், இடைக்கால பட்ஜெட்டினை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்வார்.
குடியரசுத் தலைவரின் உரை
இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் தலைமையேற்று பேசினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
நாடு முழுவதும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன என்று கூறிய ராம்நாத் கோவிந்த், ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது என்று கூறினார்.
பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேர் பயண்டைந்துள்ளனர் என்றும், பாஜக ஆட்சியில் 13 கோடி வீடுகளுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும், கூடிய விரைவில் அனைத்து கிராமங்களும் மின்சாரச வசதியினை பெறும் என்றும் அறிவித்துள்ளார்.
“ஏழைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த நலத்திட்டங்கள் யாவும் முறையாக எந்த தடையும் இல்லாமல் மக்களிடம் சென்று சேர்கிறது என்றும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என்றும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.