மத்திய பட்ஜெட் தொடர்பாக கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபையினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதுகுறித்து கோவை இந்திய வர்த்தக சபையின் தலைவர் ஸ்ரீராமுலு பேசுகையில், “அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை சாமானிய மக்களுக்கு பயன் தரும் எனவும், மாணவர்களுக்கு வட்டி மானியத்துடன் கல்வி கடன் உதவி வழங்குவது வரவேற்கத்தக்கது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 11 லட்சம் கோடி மதிப்பீட்டில் நாட்டின் சாலை, ரயில்வே மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும் மருத்துவ உபகரணங்கள், செல்போன் உபகரணங்கள், காப்பர் உலோகம், தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி மற்றும் சுங்கவரி குறைக்கப்பட்டு இருப்பது அவை சார்ந்த தொழில்களை மேம்படுத்தும்.
கோவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் புதிய கடன் உதவி, நெருக்கடியில் உள்ள தொழில் நிறுவனங்களை மேம்படுத்த உதவும்” என்றார்.
தொடர்ந்து, பேசிய கோவை இந்திய வர்த்தக சபையின் துணைத் தலைவர் சுந்தரம், “சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிற்கான சிறப்பான திட்டங்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
"Credit guarantee" கடன் உதவித்தொகையை 100 கோடி அளவிற்கு உயர்த்தி இருப்பது பிணையில்லாத கடன் உதவி பெற்று தொழிலை மேம்படுத்த உதவும்.
முத்ரா கடனுதவி திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி அளிப்பது சிறு குறு தொழில்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.
SIDBI வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, 12 புதிய SIDBI வங்கிகள் இந்த ஆண்டில் துவங்கப்படும் என்ற அறிவிப்பு சிறு குறு தொழில்களை மேம்படுத்தும் அறிவிப்பாக உள்ளது” என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு
மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள பட்ஜெட்டின் அம்சங்களை வரவேற்பதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் கோயம்புத்தூர் மண்டல சேர்மன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர், “அனைத்து துறைகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்ட பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை சிறு குறு தொழில், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் மகளிர் பங்களிப்பு உள்ளிட்ட ஒன்பது நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக ஒரு கோடி மதிப்பீட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில்துறையினர் பயன்பெறும் விதமாக ஃபெர்ரஸ் மற்றும் காப்பர் உலோகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது
இதனால் ஸ்கிராப் தொழில் மேம்படும். மேலும், மூலப் பொருட்கள் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் உற்பத்தி அதிகரிக்கும்.
மேலும், தங்கத்திற்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. இது தங்கம் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி பயன்பாட்டாளர்களுக்கும் பயனளிக்கக்கூடிய அம்சமாகும்.
சிறு குறு தொழில்களுக்கான கடன் உதவியை வங்கிகளிடம் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது சிறு குறு தொழில்களை விரிவு படுத்த உதவி செய்யும்.
நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 11 லட்சம் கோடி எனும் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையினர் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவும். அந்த வகையில் இந்த பட்ஜெட் அனைத்து துறையினருக்குமான பட்ஜெட்டாக அமைந்துள்ளது” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.