/indian-express-tamil/media/media_files/2025/08/16/income-tanx-2025-08-16-20-04-59.jpg)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டின்போது வரி விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், நிதி ஆண்டு முழுவதும் வருமான வரித்துறை பல்வேறு சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலம் மாற்றங்களை கொண்டு வருவது உண்டு.
அந்த வகையில், 2025-26 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டார். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்தில், அறிவிக்கப்பட்ட 10 முக்கிய மாற்றங்கள் வரி செலுத்துவோரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
2025-ல் அறிவிக்கப்பட்ட 10 முக்கிய வருமான வரி மாற்றங்கள்:
புதிய வரி அடுக்கு: ரூ.12 லட்சம் வரை வரி இல்லை:
புதிய வரி விதிப்பு முறையில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான மொத்த வருமானத்திற்கு வரி இல்லை என பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டது. நீங்கள் சம்பளம் பெறுபவர் என்றால், ரூ.75,000 ஸ்டாண்டர்ட் டிடக்ஷனுடன் சேர்த்து, ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. இது வரிச்சுமையை குறைக்கும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அப்டேட்டட் ரிட்டர்ன் (ITR-U): 48 மாதங்களுக்கு அவகாசம்:
ஏற்கனவே 24 மாதங்களாக இருந்த அப்டேட்டட் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இப்போது 48 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலோ, கூடுதல் வருமானத்தைச் சேர்க்கவோ அல்லது ரீஃபண்ட் கோரவோ நான்கு ஆண்டுகள் வரை அவகாசம் உள்ளது.
சுய வாடகைக்கு விடப்படாத சொத்துக்கான விலக்கு:
சுய வாடகைக்கு விடப்படாத அல்லது காலியாக உள்ள சொத்துக்களுக்கான கற்பனையான வாடகை என்ற கருத்து நீக்கப்பட்டுள்ளது. இது பலருக்கு, குறிப்பாக அடிக்கடி பணி மாற்றம் காரணமாக தங்கள் சொத்தை காலியாக வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியைத் தருகிறது.
வாடகைக்கான TDS வரம்பு அதிகரிப்பு: ரூ.2.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை
வீட்டு வாடகைக்கான டி.டி.எஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்வதற்கான வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது சிறிய மற்றும் நடுத்தர வாடகைப் பணம் பெறுபவர்களுக்கு தேவையற்ற சிக்கல்களை குறைத்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தில் சலுகை: 80TTB வரம்பு ரூ.1 லட்சமாக உயர்வு
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வங்கி அல்லது தபால் அலுவலக வட்டி வருமானத்தில் ரூ.50,000-க்கு பதிலாக இனி ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இது அவர்களின் வருடாந்திர வருமான வரிச்சுமையை கணிசமாக குறைத்துள்ளது.
எல்.ஆா.எஸ் (LRS)க்கான டி.சி.எஸ் (TCS) விதிகள்: வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு
வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் (LRS - Liberalised Remittance Scheme) திட்டத்தின் கீழ், டி.சி.எஸ் (Tax Collected at Source) பிடித்தம் செய்வதற்கான வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கல்வி நோக்கங்களுக்காக பணம் அனுப்பும்போது டி.சி.எஸ் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பெரும் உதவியாக உள்ளது.
டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் (TDS/TCS) இணக்கத்தில் நிம்மதி: தாமதத்திற்கு இனி தண்டனை இல்லை
தனிநபர் டி.சி.எஸ் அறிக்கைகளைத் தாமதமாக சமர்ப்பித்தால் கூட, வரி சரியான நேரத்தில் செலுத்தப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், அதிக டி.டி.எஸ் விகிதம் பான் இல்லாதபோது மட்டுமே பொருந்தும் என்பதால், குழப்பங்களும் அபராதங்களும் குறைந்துள்ளன.
புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்: டிஜிட்டல் மற்றும் எளிமையான நடைமுறைகள்
ஆகஸ்ட் 2025-ல் நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது. இது 1961-ன் வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக வருகிறது. இந்த மசோதாவின் நோக்கம், வரி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கி, வெளிப்படையாகவும், எளிமையாகவும் மாற்றுவதாகும். நில் டிடிஎஸ் (NIL-TDS) சான்றிதழ்கள் போன்ற புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஐ.ஆர்.டி (ITR) காலக்கெடு நீட்டிப்பு: செப்டம்பர் 15 வரை அவகாசம்
பொதுவாக ஜூலை 15 ஆக இருந்த, தணிக்கை இல்லாத வரி செலுத்துவோருக்கான ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும் காலக்கெடு, மே மாதத்தில் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கணினி அமைப்புகளில் செய்யப்பட்ட மேம்பாடுகள் மற்றும் பயன்பாட்டின் எளிமை காரணமாக அளிக்கப்பட்ட ஒரு முக்கிய அவகாசம்.
முன் வரிக்கு வட்டி விகிதம் அதே 1%: தவறான கருத்து நீக்கம்
புதிய மசோதாவின் வரைவில், முன் வரி (Advance Tax) குறைபாட்டிற்கான வட்டி விகிதம் 1%-ல் இருந்து 3% ஆக உயரும் என்ற ஒரு தவறான கருத்து பரவியது. ஆனால், நாடாளுமன்றத்தின் தெளிவுரைக்குப் பிறகு, வட்டி விகிதம் மாதத்திற்கு 1% மட்டுமே என உறுதிப்படுத்தப்பட்டது. இது ஒரு வரைவுப் பிழை, விதி மாறவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோருக்கான முக்கிய ஆலோசனைகள்:
புதிய வரி விதிப்பு முறையையும், பழைய முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க மறக்காதீர்கள். சிலருக்கு பழைய முறை இன்னும் பயனுள்ளதாக இருக்கலாம். தாமதக் கட்டணம் மற்றும் வட்டியைத் தவிர்க்க செப்டம்பர் 15-க்குள் ITR தாக்கல் செய்யுங்கள். எல்.ஆர்.எஸ் டி.டி.எஸ் டி.சி.எஸ், ஐ.டி.ஆர் யு (LRS, TDS/TCS, ITR-U) மற்றும் மூத்த குடிமக்கள் விதிகளை உங்கள் தனிப்பட்ட நிதி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புதிய மசோதாவின் கீழ் உள்ள டிஜிட்டல் இணக்கத்தைப் பயன்படுத்தி உங்கள் எதிர்கால வரி திட்டமிடலை எளிதாக்குங்கள். 2025 பட்ஜெட் முதல் புதிய வருமான வரி மசோதா வரை, தனிநபர் வரி செலுத்துவோரை மனதில் கொண்டு அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வரி விலக்கு முதல் நடைமுறைகளை எளிமையாக்குவது வரை எல்லா துறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு, திட்டமிட்டு, சரியான நேரத்தில் செயல்படுவது உங்கள் நிதி பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.