தற்போது இந்தியாவில் வழக்கத்தில் உள்ள 10 இலக்கங்களைக் கொண்ட கைப்பேசி எண்களை, 13 இலக்கங்கள் கொண்டதாக மாற்றும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. தொலைப்பேசி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, கூடுதலாகத் தேவைப்படும் எண்கள் போன்ற பல காரணங்களால் இந்திய தொலைத்தொடர்புத் துறை இந்த மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது.
இதன்படி, வரும் 2019ம் ஆண்டில் அனைத்து மொபைல் எண்களும் 13 இலக்கங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும். அதற்கான ஆயத்த பணிகள் எல்லா மட்டங்களிலும் தொடங்கப்பட வேண்டும் என தொடர்புள்ள அனைவருக்கும் அரசு சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி 8ம் தேதியே இதுகுறித்த விரிவான தகவல் அனைத்து மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் திட்டப்படி, தற்போதுள்ள 10 இலக்க எண்கள் அனைத்தும் 13 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றித்தரப்படும். இந்த பணி வரும் அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் 31ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். புதிதாக மொபைல் சேவை பெற விண்ணப்பிக்கும் நபர்களான புதிய சிம்களில் வரும் ஜூலை மாதம் முதலே 13 இலக்கம் கொண்ட எண்கள் வழங்குவது தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் இதுகுறித்து தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் டிராய்க்கும் முறையாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சீனாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 11 இலக்கம் கொண்ட எண்கள்தான் இதுவரை உள்ளதில் மிகப் பெரிய எண்கள். மற்ற நாடுகள் பலவும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மற்ற காரணிகளில் முன்னணியில் இருந்தாலும் மொபைல் போன் எண்களைப் பொறுத்தவரை குறைவான இலக்கம் கொண்டதாகவே தொடர்கின்றன.
இந்திய புதியமுறை, இந்தியர்களைப் பொறுத்தவரை புதிய நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. அதன்படி, அண்மையில்தான் பொதுமக்கள் பலரும் தங்களது மொபைல் எண்ணை தமக்கு வழங்கப்பட்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது, வங்கிக் கணக்குடன் இணைப்பது, காப்பீடு பாலிசியுடன் இணைப்பது உள்ளிட்ட பல காரியங்கங்களை நிறைவு செய்து முடித்திருக்கிறார்கள். இந்நிலையில் அரசின் இந்த முடிவு, மீண்டும் ஒருமுறை பொதுமக்களை எல்லா இடங்களுக்கும் காவடி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.