ஆர்.சந்திரன்
கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசு, உயர்மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது. அப்போது, ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிடிஐ செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 15 மாதங்களாகத் தொடரும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்பதைத் தெரிவிக்கவில்லையாம். எனினும், எண்ணுவதை விரைவுபடுத்த 59 அதிநவீன இயந்திரங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. இந்த இயந்திரங்கள்வசம் வரும் இந்திய ரூபாய் நோட்டுகள் உண்மையானவைதானா என்பதையும் சேர்த்தே சோதிக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
2016-17க்கான தனது ஆண்டறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்டபோது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் தன்னிடம் திரும்பிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15.28 லட்சம் கோடி ரூபாய் என அது தெரிவித்தது. அதாவது பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அமலான அன்று புழக்கத்தில் இருந்தவற்றில் 99 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என கூறப்பட்டது. அதாவது, 500 ரூபாய் தாள்களில் 1,716 கோடியும், 1000 ரூபாய் நோட்டுகளில் 68,580 கோடியும், ஆக மொத்தம் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெறும் 16,050 கோடி ரூபாய் மதிப்புக்கான ரொக்கம்தான் மீண்டும் ரிசர்வ் வங்கி கஜானாவுக்குத் திரும்பாமல் மக்களிடமே தங்கிவிட்டததாக தெரிகிறது. அதை உறுதிப்படுத்துக் கொண்டு, கைவசம் உள்ள மதிப்பு இழந்த, எல்லா நோட்டுகளையும் அழிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிடும் என்றும் கூறப்படுகிறது.