இன்று முதல் (ஜன 1) மூன்று வகையான வங்கி கணக்குகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இணைய வழி மோசடிகளை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு விதிகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மூன்று விதமாக வங்கி கணக்குகள் மூடப்படுகிறது. அதனடிப்படையில், டார்மண்ட் அக்கவுண்ட் என்று சொல்லப்படக் கூடிய செயலற்ற வங்கி கணக்கு, 12 மாதங்களுக்கு மேல் பணப்பரிவர்த்தனை நடைபெறாத இன்ஆக்டிவ் வங்கி கணக்கு மற்றும் பணம் இல்லாமல் இருக்கும் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகள் ஆகியவை இன்று முதல் முடக்கப்படுகின்றன.
டார்மண்ட் அக்கவுண்ட்:
தொடர்ச்சியாக 2 ஆண்டுகளுக்கு மேலாக எந்த விதமான செயல்பாடுகளும் இல்லாமல் இருக்கும் வங்கி கணக்குகள், சுலபமாக மோசடி செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த வகையான வங்கி கணக்குகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஆக்டிவ் அக்கவுண்ட்:
இதேபோல், 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக பணப்பரிமாற்றம் நடைபெறாத வங்கி கணக்குகளும் இன்று முதல் முடக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நாள்களாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளாத பயனாளர்கள், தங்கள் வங்கி கிளையை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது வங்கிகளின் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்:
மேலும், நீண்ட காலத்திற்கு பணம் இல்லாமல் இருக்கும் வங்கி கணக்குகளும் முடக்கப்படுகின்றன. இது போன்ற கணக்குகளை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கும், பயனாளர்கள் மற்றும் வங்கி இடையே செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.