ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு 18 வயது வரை ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு அதற்கான காப்பீடு தொகை பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும். கொரோனாவால் பெற்றோரை அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயது வரை மாத உதவித்தொகையும், 23 வயது அடையும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
பிஎம் கேர்ஸில் குழந்தைகளுக்கான நலத்திட்டம் கடந்த மே 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் கொரோனாவில் தாய், தந்தை இருவரையும் இழந்த அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காக்கும் திட்டமாகும். இந்த திட்டம் 2020, மார்ச் 11-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நலன், மனநலம், கல்விச்சூழல் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்கவும், 23 வயது அடையும்போது வாழ்க்கையை நடத்த உதவித்தொகையும் வழங்குவதாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil