ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.
தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 44 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவல் காரணாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கூட்டமும் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.
இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 20 மாதங்கள் கழித்து மாநில நிதியமைச்சர்கள் நேரடியாக பங்கேற்றார்கள்.
கூட்டத்தில், பெட்ரோலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. ஆனால், தற்போதைக்கு அதனை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதற்கான அவசியம் இல்லை என ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, டிசம்பர் 31 வரையில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்துகளான Amphotericin B, Tocilizumab ஆகியவற்றுக்கு 0 விழுக்காடு வரியும், Remdesivir,heparinm Itolizumab,posaconazole,Inlfliximab, Favipiravir,Casirivimab, imdevimab, 2 deoxy D glucose, bamlanivimab, Etesevimab ஆகிய மருந்துகளுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு டிசம்பர் 31 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி முற்றிலுமாக விலக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கெனவே மருந்துப் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி குறைப்பு மற்றும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கான அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ உபகரணங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படவில்லை. மரபுசாரா மின்னுற்பத்தி கருவிகள் மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பேனா மற்றும் உதிரி பாகங்கள் மீதானவரி 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின் படி தற்போது விதிக்கப்பட்டு உள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது இதுநாள் வரையில் இத்தளத்தில் இருக்கும் உணவகங்களில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக, உணவுகளின் விலை அதிகரிக்காது. இந்த முறையிலான வரி வசூல் மூலம் வரி ஏய்ப்பு, வரிச் செலுத்துவதில் செய்யப்படும் ஏமாற்று வேலைகளை இதன் மூலம் தடுக்க முடியும்.
இதுகுறித்து வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில், “கூடுதல் வரி இல்லை, புதிய வரி இல்லை. வரி உணவகங்களால் செலுத்தப்பட்டது, இப்போது உணவகங்களுக்குப் பதிலாக, அந்நிறுவனங்களால் செலுத்தப்படும், இது வரி ஏய்ப்பைத் தடுக்கும்" என்றார்.
ஜிஎஸ்டியின் கீழ் எரிபொருளைச் சேர்ப்பதற்கு, கேரள உயர் நீதிமன்றம் கேட்டதால் மட்டுமே கவுன்சில் இந்த பிரச்சினையைப் பற்றி விவாதிப்பதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், " இது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்களைச் சேர்க்க இது சரியான நேரம் அல்ல என கவுன்சில் கருதுகிறது என தெரிவித்தார். முன்னதாக, பல மாநிலங்கள் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருள்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.