Kerala | lottery | கேரள லாட்டரியில் மே 15,2024ஆம் தேதி நடந்த ஃபிப்டி ஃபிப்டி குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி நடைபாதை வியாபாரி சுகுமாரியம்மாவுக்கு கிடைத்துள்ளது. சுகுமாரியம்மாவிடம் இருந்து லாட்டரி சீட்டை பறித்த கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மியூசியம் ஜங்ஷனில் தொப்பி, பேக் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்துவரும் நடைபாதை வியாபாரி சுகுமாரியம்மா. 72 வயதான இவர், மே 15ஆம் தேதி ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி குலுக்கலில் 12 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார்.
இதில் எஃப்.ஜி 348822 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி விழுந்துள்ளது. மேலும் மற்றொரு லாட்டரி சீட்டுக்கு ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரம் விழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த லாட்டரி சீட்டை கண்ணன் என்பவர் அபகரித்துள்ளார். அவர் உங்களிடம் உள்ள லாட்டரி சீட்டுக்கு ரூ.100 மற்றும் ரூ.500 பரிசு விழுந்துள்ளது எனக் கூறி அவரிடம் இருந்து சீட்டை அபகரித்துள்ளார்.
பின்னர் இது குறித்து சுதாரித்துக் கொண்ட சுகுமாரியம்மா நடந்த விஷயம் குறித்து முகவரிடம் கூற அவர் போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் கண்ணன் பிடிபட்டார். முன்னதாக கண்ணன் தனக்கு லாட்டரியில் ரூ.1 கோடி விழுந்துள்ளது எனக் கூறி அங்கிருந்தவர்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மியூசியம் ஜங்ஷன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து பேசிய சுகுமாரியம்மா, “கடந்த காலங்களிலும் எனக்கு லாட்டரியில் ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.60 வரையிலான பரிசுகளை வென்றுள்ளேன். லாட்டரியில் மிகப்பெரிய தொகை எனக்கு பரிசாக விழ வேண்டும் எனக் எண்ணிக் கொள்வேன். எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நான் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். தற்போது என் கனவு நினைவாகி விட்டது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“