/indian-express-tamil/media/media_files/2025/09/17/agriculture-infrastructure-fund-2025-09-17-19-16-28.jpg)
3% வட்டி மானியத்துடன் விவசாயிகளுக்கு ரூ.2 கோடி கடன்: மத்திய அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
இந்திய விவசாயத்தை மேம்படுத்தும் நோக்குடன், மத்திய அரசு 'வேளாண் உள்கட்டமைப்பு நிதி' (Agriculture Infrastructure Fund) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்கள் தங்களது விவசாய உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்திக் கொள்ள ரூ.2 கோடி வரை கடனுதவி பெற முடியும். இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பொருந்தும்.
கடன் மற்றும் மானிய விவரங்கள்:
இத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். இந்தக் கடனுக்கு 7 ஆண்டுகள் வரை 3% வட்டி மானியம் வழங்கப்படும். மத்திய அரசு கடன் உத்தரவாதத்தையும் (credit guarantee) அளிக்கிறது. மொத்த திட்ட மதிப்பில், 10% பயனாளியின் பங்களிப்பாக இருக்க வேண்டும்.
எந்தெந்தத் தொழில்களுக்குக் கடன் கிடைக்கும்?
இந்த நிதி பல்வேறு விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். அவற்றில் சில:
காய்கறி நாற்றங்கால் அமைத்தல்
மண்புழு உரம் தயாரிப்பு
காளான் வளர்ப்பு
பசுமைக்குடில் (Poly house) அமைத்தல்
சேமிப்புக் கிடங்குகள்
பொருட்களைப் பிரித்துத் தரம் பிரிக்கும் இயந்திரங்கள்
சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள்
யார் விண்ணப்பிக்கலாம்?
தனிப்பட்ட விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு விவசாய அமைப்புகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விவசாய தொழில்முனைவோர்
விவசாய குழுக்கள்
கூட்டுப் பொறுப்பு குழுக்கள்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு
புதிய நிறுவனங்கள் (Start-ups)
வணிக நிறுவனங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், http://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தை, விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report)யுடன் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பித்த பிறகு, திட்ட அறிக்கையை அருகிலுள்ள வங்கிக் கிளைகளிலும் சமர்ப்பிக்கலாம்.
இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, கூட்டுறவு சங்கங்கள், நபார்டு வங்கி, மாவட்ட தொழில் மையங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்களை அணுகலாம். இத்திட்டம், விவசாய உற்பத்தியை நவீனப்படுத்தி, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.