/tamil-ie/media/media_files/uploads/2023/02/air-india-express-photo-1200-1-2.jpg)
ஏர் இந்தியா நிறுவனம் போயிங் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதை ‘வரலாற்று ஒப்பந்தம்’ என்று பாராட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடென், இந்தியா-அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்த தானும் பிரதமர் மோடியும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
ஏர் இந்தியா நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களின் கீழ், டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 470 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது,. இதில் ஏர்பஸ்ஸிலிருந்து 250 விமானங்களும் 220 போயிங் ஜெட் விமானங்களும் அடங்கும். மொத்தமாக 470 ஜெட் விமானங்கலை வாங்குவது என்பது மிகப்பெரிய ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் ஏர் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் 40 பெரிய ஏ350 விமானங்களும் 210 சிறிய ரக விமானங்களும் அடங்கும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சந்திரசேகரன் கூறுகையில், பெரிய ரக விமானங்கள் மிக நீண்ட தூர விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
இது ஒரு முக்கிய ஒப்பந்தம் என்று பாராட்டிய பிரதமர் மோடி, இந்த வளர்ச்சியானது இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஆழமான உறவுகளையும், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வெற்றிகள் மற்றும் நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது என்றார். “நம்முடைய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இந்தியாவின் வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்துவது நமது தேசிய உள்கட்டமைப்புக் கொள்கையின் முக்கிய அம்சமாகும்” என்று மோடி கூறியதாக பி.டிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளிலும் வாய்ப்புகளை உருவாக்கவும் ஏர் இந்தியா மற்றும் ஏர்பஸ் இடையே ஒரு முக்கியமான கூட்டுறவு தொடங்கும்போது என்னுடன் இணைந்ததற்காக எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுக்கு நன்றி கூறுகிறேன். இது வலுவான இந்திய-பிரெஞ்சு கூட்டுறவை பிரதிபலிக்கிறது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசின் சாதனைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74ல் இருந்து 147 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். உடான் திட்டத்தின் கீழ், நாட்டின் தொலைதூர பகுதிகள் விமான இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு, அதன் மூலம் மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில், விமானப் போக்குவரத்துத் துறையில் உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா மாறும், அடுத்த 15 ஆண்டுகளில், 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும் என்று மோடி கூறினார். இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா - மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் விண்வெளித் தயாரிப்பில் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடென் உடன் பேசினார். இரு நாடுகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பிரகாசமான எடுத்துக்காட்டு என இரு தலைவர்களும் ஏர் இந்தியா மற்றும் போயிங் இடையேயான ஒப்பந்தத்தை பாராட்டினர். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடென் உடன் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்கும் மேலாக கேரியர் விமானம் ஆர்டர் செய்வது இதுவே முதல் முறை. இந்தியன் ஏர்லைனின் கடைசியாக 2005-ல் 111 விமானங்களை வாங்கியது - போயிங்கிலிருந்து 68 விமானங்களையும் ஏர்பஸ்ஸிலிருந்து 43 விமானங்களையும் வாங்கியது இந்த ஒப்பந்தம் 10.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது.
2022 ஜனவரியில் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தியதில் இருந்து, டாடா குழுமம் விமான நிறுவனத்தை புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதல் ஆண்டில், ஏர் இந்தியா விமானங்களை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இது விமான எண்ணிக்கையில் 30% அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இதில் வாராந்திர சர்வதேச விமானங்களில் 63% அதிகரிப்பு உள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா தனது முதல் ஆண்டை நிறைவு செய்த நிலையில், இந்த ஜனவரியில் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தனது நீண்ட தூர சர்வதேச விமானங்களில் தயாரிப்பை மேம்படுத்த புதிய விமானங்களின் 'வரலாற்று' ஒப்பந்தம் மற்றும் முதலீடுகளை உள்ளடக்கிய இரண்டாவது ஆண்டிற்கான திட்டங்களை பட்டியலிட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.